புதுடில்லி, யு.பி.எஸ்.சி., எனப்படும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இறுதித் தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. இவற்றில், தேசிய அளவில், முதல் நான்கு இடங்களை பிடித்து பெண்கள் சாதனை படைத்துள்ளனர்.
ஐ.ஏ.எஸ்., – ஐ.பி.எஸ்., – ஐ.எப்.எஸ்., போன்ற உயர் பதவிகளுக்கு, அதிகாரிகளை தேர்வு செய்வதற்கான குடிமைப் பணி தேர்வுகளை, யு.பி.எஸ்.சி., ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.
இது, முதல்நிலை தேர்வு, பிரதான தேர்வு, நேர்முகத் தேர்வு என, மூன்று நிலைகளாக நடத்தப்படுகிறது.
இந்நிலையில், 2022ம் ஆண்டுக்கான யு.பி.எஸ்.சி., முதன்மைத் தேர்வு செப்டம்பரில் நடந்தது. தொடர்ந்து, கடந்த ஜனவரி – மே வரை நேர்முகத் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வின் இறுதி முடிவுகள் நேற்று வெளியாகின.
மொத்தம் 1,011 இடங்களுக்கு நடந்த தேர்வில், 933 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.தேசிய அளவில், முதல் நான்கு இடங்களை பெண்கள் பிடித்து சாதனை படைத்துள்ளனர். அதன்படி, இஷிதா கிஷோர் முதலிடம்; கரிமா லோகியா இரண்டாம் இடம்; உமா ஹராதி மூன்றாம் இடம்; ஸ்மிருதி மிஷ்ரா நான்காம் இடம் பிடித்துள்ளனர்.
தேர்ச்சி பெற்றவர்களில், 345 பேர் பொது பிரிவைச் சேர்ந்தவர்கள்; 99 பேர் பொருளாதார ரீதியாக பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்தவர்கள்; 263 பேர் ஓ.பி.சி., பிரிவைச் சேர்ந்தவர்கள்; 154 பேர் எஸ்.சி., பிரிவையும், 72 பேர் எஸ்.டி., பிரிவையும் சேர்ந்தவர்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement