அடிச்சதெல்லாம் போதாதா ராசா..? ரூ.500 கோடி இருந்தும் பத்தலையா..? முதியவர்களை வீதியில் நிறுத்திய கொடுமை..!

ஆருத்ரா நிதி நிறுவனத்தில் முதலீடு செய்ய வைத்து 500 கோடி ரூபாய்க்கு மேல் பணத்தை சுருட்டிய புகாருக்குள்ளான ஏஜெண்டு ஒருவர் , பட்டப்பகலில் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து முதியவரின் வீடு புகுந்து பொருட்களை எடுத்து தெருவில் வைத்து, வீட்டை அபகரித்த சம்பவம் காஞ்சிபுரத்தில் அரங்கேறி உள்ளது

ஐயா… உங்க வீட்டை வித்து ஆருத்ராவில் பணம் போட்டால், ஒரே வருஷத்தில 2 வீடாக வாங்கிக்கலாம் .. உங்க கடனையும் அடைச்சிடலாம் .. என்று ஆசைவார்த்தைக் கூறிய ஆருத்ரா நாகராஜை நம்பி வீட்டை விற்க கையெழுத்துப்போட்டதால் , மனைவியுடன் வீதியில் தவிக்கும் முதியவர் ஸ்டீபன் இவர் தான்..!

காஞ்சிபுரம், ஜிம் நகர் பகுதியில் சொந்த வீட்டில் வசித்து வந்த ஸ்டீபன் – சுகுணா தேவி தம்பதியினருக்கு அறிமுகமான நாகராஜ், 25 லட்ச ரூபாய் மதிப்புள்ள வீட்டை விற்று 6 லட்சம் ரூபாய் பணத்தை மட்டும் இவர்கள் கையில் கொடுத்துவிட்டு மீதி பணத்தை ஆருத்ராவில் முதலீடு செய்துள்ளேன் என்று கூறி ஏமாற்றி உள்ளார்.

ஆருத்ரா மோசடி அம்பலமானதால் முதலீடு செய்தவர்களின் பணத்தை சுருட்டிக் கொண்டு அதன் இயக்குனர்கள் திசைக்கு ஒருவராக பதுங்கிக் கொள்ள… ஆயிரக்கணக்கான முதலீட்டாளர்களிடம் இருந்து 500 கோடி ரூபாய் வரை வசூலித்த நாகராஜ் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார்.

இந்த மோசடி வழக்கில் இருந்து அண்மையில் ஜாமீனில் வெளியே வந்த நாகராஜ், தான் பினாமியாக உறவினர்கள் பெயரில் வாங்கிக் குவித்த சொத்துக்களை கையகப்படுத்த தொடங்கி உள்ளார். அதன்படி ஸ்டீபன் – சுகுணாதேவி தம்பதிகளிடம் எழுதி வாங்கிய வீட்டையும் ஆதாரவாளர்களுடன் சென்று கைப்பற்றி உள்ளார்.

வீட்டில் உள்ள பொருட்களை எல்லாம் வீதியில் தூக்கி வைத்து விட்டு, வயதான தம்பதியர் இருவரையும் வீதியில் நிறுத்தி கதவை பூட்டியதாக கூறப்படுகின்றது. இதையடுத்து தம்பதியருக்கு ஆதரவாக பேசிய வழக்கறிஞருக்கும், பாதுகாப்புக்கு வந்திருந்த போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது

சிவில் பிரச்சனை என்று விசாரிக்க மறுத்த நிலையில் போலீசார் ஆதரவுடன் தற்போது வீட்டை ஆருத்ரா நாகராஜ் அபகரித்துக் கொண்டதாக வழக்கறிஞர் குற்றஞ்சாட்டினார்

இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த காவல் ஆய்வாளர், இருதரப்பிலும் விசாரித்தார். 6 லட்சம் ரூபாய் மட்டுமே கொடுத்து விட்டு மீதித்தொகையை தராமல் ஏமாற்றிவிட்டதாக முதியவர் தெரிவித்த நிலையில் , வீட்டில் உள்ள பொருட்களை எப்படி வெளியே எடுத்து வைக்கலாம் ? என்று கேட்டதோடு, அத்துமீறி வீடுபுகுந்ததாக வழக்கு பதிவு செய்து நாகராஜை கைது செய்தார்

காஞ்சிபுரத்தில் நாகராஜை போன்று ஏராளமான ஆருத்ரா முகவர்கள் பினாமியின் பெயரில் சொத்துக்களை வாங்கிக் குவித்துள்ளதாகவும், விரிவான விசாரணை நடத்தி அவற்றையும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைப்பற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.