வாஷிங்டன்,
அமெரிக்க அதிபர் ஜோ பைடனை கொலை செய்ய முயற்சித்ததாக, இந்திய வம்சாவளியை சேர்ந்த சாய் வர்ஷித் கண்டுலா(19) என்ற இளைஞரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
அமெரிக்க அதிபர் வசிக்கும் வெள்ளை மாளிகை அருகே, பாதுகாப்பு தடுப்புகள் மீது டிரக் ஒன்று மோதியது. இதனையடுத்து அந்த டிரக்கை தடுத்து நிறுத்தி, அதில் இருந்த இளைஞரை பிடித்து பாதுகாப்பு படையினர் விசாரித்தனர். அதில் அவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்பதும், தற்போது மிசூரி மாகாணத்தில் வசித்து வரும் சாய் விர்ஷித் என்பது தெரியவந்தது. பாதுகாப்பு தடுப்புகளை வெள்ளை மாளிகையின் உள்ளே வாகனத்தை செலுத்த முயன்றதால் அவரை, கைது செய்யப்பட்டார்.
அதிகாரி ஒருவர் கூறுகையில், டிரக்கை, சாய் விர்ஷித் வாடகைக்கு எடுத்து வந்துள்ளார். போலீசார் அவரை பிடிக்க முயன்றனர். அப்போது ரிவர்சில் எடுக்க முயன்ற போதும் டிரக் தடுப்புகள் மீது மோதியது. இந்த தாக்குதலை 6 மாதங்களாக திட்டமிட்டு வந்ததாக போலீசாரிடம் சாய் விர்ஷித் வாக்குமூலம் அளித்துள்ளார்.
வெள்ளை மாளிகைக்குள் நுழைந்து அதிகாரத்தை கைப்பற்ற முயற்சித்ததாகவும் கூறியுள்ளார். எப்படி அதிகாரத்தை கைப்பற்ற முடியும் என்ற கேள்விக்கு, அவர் அதிபரை கொலை செய்வதுடன், எனது பாதையில் குறுக்கே நிற்கும் அனைவரையும் தாக்குவேன் எனக்கூறினார். டிரக்கில் நாஜிக்கள் கொடி மற்றும் சின்னம் இருந்தது. இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.