புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழா மே28-ம் தேதி நடைபெறும் என மத்திய அரசு அறிவித்தது. அதைத் தொடர்ந்து, சாவர்க்கர் பிறந்த தினமான மே 28, குடியரசுத் தலைவர் அழைக்கப்படவில்லை, மத்திய அரசு அரசியலமைப்பு உரிமையை மதிக்கவில்லை, பிரதமருக்குப் பதிலாகக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முதான் கட்டடத்தை திறக்க வேண்டும் எனச் சர்ச்சைகள் எழுந்து பேசுபொருளாகியிருக்கிறது.

இந்த நிலையில், புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் மோடி திறந்து வைப்பதற்குக் காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவிப்பது குறித்து மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, காங்கிரஸைக் கடுமையாகச் சாடியிருக்கிறார். இது அவர் செய்தியாளர்களிடம் பேசும் போது,”மே 28ம் தேதி புதிய நாடாளுமன்றம் கட்டடத்தை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார்.
இதன் அடிக்கல் 2020 டிசம்பரில் பிரதமர் மோடியால் நாட்டப்பட்டது. புதிய கட்டடம் சென்ட்ரல் விஸ்டாவின் மறுவடிவமைப்பின் ஒரு பகுதியாகும், மேலும் 1,200 எம்.பி.க்கள் நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தின் போது ஒன்றாக பங்கேற்கலாம். புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் திறக்கக் கூடாது எனக் காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவிக்கிறது. ஆனால், ஆகஸ்ட் 1975-ல், அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி நாடாளுமன்ற இணைப்பைத் திறந்து வைத்தார், பின்னர் 1987-ல் அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி பாராளுமன்ற நூலகத்தைத் திறந்து வைத்தார்.

காங்கிரஸ் அரசின் போது காங்கிரஸ் தலைவரால் நாடாளுமன்ற கட்டடங்களைத் திறக்க முடியுமானால், எங்கள் அரசுத் தலைவர் அதை ஏன் செய்யக்கூடாதா? புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை விமர்சித்து, அதன் அவசியத்தைக் கேள்விக்குள்ளாக்கியதிலிருந்து, எதிர்க் கட்சியைச் சேர்ந்த பலர் இப்போது அரசியலமைப்பிலிருந்து ஒரு நாளைக்கு ஒரு தகவலை தவறாக மேற்கோள் காட்டி இலக்கை மாற்றுகிறார்கள்” எனத் தெரிவித்திருக்கிறார்.
மத்திய அமைச்சரின் கருத்து குறித்துப் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர், “அரசியலமைப்பு சட்டத்தின் 60 மற்றும் 111வது சட்டப்பிரிவுகள் குடியரசுத் தலைவர் தான் நாடாளுமன்றத்தின் தலைவர் என்பதைத் தெளிவுபடுத்துகிறது. எனவே புதிய நாடாளுமன்ற கட்டடத்தை அவர்தான் திறந்து வைக்க வேண்டும்” என பதிலளித்திருக்கிறார்.