கொழும்பு: இலங்கை இப்போது மோசமான நிதி நெருக்கடியில் சிக்கி தவிப்பது அனைவருக்கும் தெரியும். இதற்கிடையே இந்த சூழலை பயன்படுத்தி சீன பெட்ரோலிய நிறுவனம் இலங்கைக்குள் நுழைந்துள்ளது.
நமது அண்டை நாடான இலங்கை இப்போது மிக மோசமான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. குட்டி தீவு நாடான இலங்கையில் கடந்தாண்டு முதல் பொருளாதார நெருக்கடி உச்சமடைந்தது. அத்தியாவசிய பொருட்களின் விலையும் உச்சம் தொட்டது.
பல மணி நேரம் மின்வெட்டு இருந்தது. எரிபொருளுக்கும் கடும் தட்டுப்பாடு இருந்தது. இந்த பொருளாதார குழப்பம் அங்கே அரசியல் குழப்பத்திற்கும் வழி வகுத்தது. அதிபர் மாளிகை தொடங்கிப் பல இடங்களிலும் மிகப் பெரிய போராட்டங்கள் நடைபெற்றன.
இலங்கை: இதனால் அங்கே அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்ஷ கூட நாட்டை விட்டு வெளியேறும் சூழல் ஏற்பட்டது. அந்தளவுக்கு ஒரு கட்டத்தில் இலங்கையில் நிலைமை ரொம்பவே மோசமாக இருந்தது. அப்போது இந்தியா மட்டுமே இலங்கைக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்தது. அதன் பின்னரே நிலைமை இப்போது மெல்லச் சீராகி வருகிறது. இருப்பினும், எரிபொருள், மின்சாரம் ஆகிய பிரச்சினைகள் முழுமையாகச் சரியாகவில்லை.
இதனிடையே சீன எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனமான சினோபெக்குடன் இலங்கை முக்கிய ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பெட்ரோலியப் பொருட்களின் சேமிப்பு, விநியோகம் மற்றும் விற்பனை தொடர்பாக சினோபெக்குடன் நீண்ட கால ஒப்பந்தம் ஒன்றில் இலங்கை கையெழுத்திட்டுள்ளது.
சீன நிறுவனம்: சினோபெக் உடனான இலங்கையின் ஒப்பந்தத்திற்கு கடந்த மார்ச் மாதம் இலங்கை அரசு ஒப்புதல் வழங்கியிருந்தது.. இலங்கையில் எரிபொருள் சில்லறை விற்பனையை தாராளமயமாக்கி, சீனா, ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா நிறுவனங்களை அனுமதிக்கும் நோக்கத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2003ஆம் ஆண்டில் இந்திய எண்ணெய் நிறுவனம் – IOC நிறுவனத்திற்கு அனுமதி அளிக்கும் வரை, இலங்கையில் சில்லறை எரிபொருள் சந்தையில் CPC எனப்படும் இலங்கை பெட்ரோலிய நிறுவனம் மட்டுமே இருந்தது.
இலங்கை அதிபர் மாளிகை இது குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், “இலங்கையில் பெட்ரோலியப் பொருட்களின் சேமிப்பு, விநியோகம் மற்றும் விற்பனை தொடர்பான நீண்டகால ஒப்பந்தம் தொடர்பாக சினொபெக் நிறுவனத்துடனான பேச்சுவார்த்தை நிறைவடைந்துள்ளன.. சினோபெக், யுனைடெட் பெட்ரோலியம் ஆஸ்திரேலியா, அமெரிக்காவின் ஆர்எம் பார்க்ஸ் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் சில்லறை எரிபொருள் சந்தையில் நுழைய உரிமங்களை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியது.
இருப்பினும், இப்போது வரை சீனாவின் சினோபெக் நிறுவனத்துடன் மட்டுமே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் இப்போது அரசு நிறுவனமான CPC டீலர்கள மூலம் இயக்கப்படும் 150 பெட்ரோல் பம்புகள் புது நிறுவனத்துக்கு ஒதுக்கப்படும்”என்று அதில் கூறப்பட்டுள்ளது.
எத்தனை ஆண்டுகள்: அடுத்த 20 ஆண்டுகள் எரிபொருள் விற்பனை செய்யச் சீன நிறுவனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடனில் சிக்கித் தவிக்கும் இலங்கை, பொருளாதாரத்தை இயல்பு நிலைக்குக் கொண்டுவர இன்னும் போராடி வரும் நிலையில், இது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இலங்கைக்கு இப்போது வெளிநாட்டுக் கடன் 42.6 பில்லியன் டாலர், உள்நாட்டுக் கடன் 42 பில்லியன் டாலர் என மொத்தம் கடன் 83.6 பில்லியன் கடன் இருப்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஏப்ரல் 2022இல், இலங்கை செலுத்த வேண்டிய காலத்தில் கடன் தொகையைச் செலுத்த முடியவில்லை என முதலில் அறிவித்தது. பிரிட்டன் நாட்டிடம் இருந்து சுதந்திரம் பெற்ற 1948 முதல் இலங்கை இப்படியொரு நிலைக்குத் தள்ளப்பட்டதே இல்லை. அந்நிய செலாவணி பற்றாக்குறை ஏற்பட்ட நிலையில், எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டது. இன்னுமே கூட அங்கு ரேஷன் முறையிலேயே எரிபொருள் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
விமர்சனம்: இருப்பினும், இந்த வாய்ப்பை இந்திய நிறுவனங்கள் பெற்றிருக்க வேண்டும் என வல்லுநர்கள் சிலர் விமர்சிக்கின்றனர். இலங்கை நமக்கு மிகவும் முக்கியமான ஒரு நாடாகும். இலங்கை இக்கட்டான நிலையில் இருந்த போதும் இந்தியா தான் முதலில் சென்று உதவியது. அப்படியிருக்கும் போது, இதுபோன்ற திட்டங்கள் சீனாவுக்குச் செல்வதை இந்தியா அனுமதித்திருக்கக் கூடாது என்றும் இது மத்திய அரசின் தோல்வி என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.