சென்னை: ஐஏஎஸ் உட்பட சிவில் சர்வீஸ் பதவிக்கான தேர்வில் தேசிய அளவில் 933 பேர் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். தமிழக அளவில் முதலிடத்தை சென்னையை சேர்ந்த ஜீ ஜீ என்ற பட்டதாரி பெண் பிடித்துள்ளார்.
நாட்டில் ஐஏஎஸ், ஐபிஎஸ் உட்பட 26 விதமான உயர் பதவிகளில் உள்ள 1,011 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை 2022 பிப்ரவரி மாதம் யுபிஎஸ்சி வெளியிட்டது. இதற்கான முதல்நிலைத் தேர்வு 2022 ஜூன் 5-ம் தேதி நடந்தது. இந்த தேர்வை நாடு முழுவதும் 5.5 லட்சம் பேர் எழுதினர். இதன் முடிவுகள் அதே மாதம் 22-ம் தேதி வெளியானது. அதில் 13,090 பேர் தேர்ச்சி பெற்றனர்.
முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான முதன்மை தேர்வு செப்டம்பர் 16 முதல்25-ம் தேதி வரை நடத்தப்பட்டது. இதற்கான முடிவுகள் டிசம்பர் 6-ல் வெளியிடப்பட்டது. இதில் வெற்றிபெற்ற 2,529 பேர் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டனர். இவர்களுக்கான நேர்காணல் கடந்த ஜனவரி மாதம் முதல் நடப்பு மே மாதம் வரை நடைபெற்றது.
இந்நிலையில் இறுதித் தேர்வு முடிவுகளை www.upsc.gov.in எனும் இணையதளத்தில் யுபிஎஸ்சி நேற்று வெளியிட்டது.
அவற்றில் 933 பேர் சிவில் சர்வீஸ் பணிகளுக்கு தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் தேசிய அளவில் முதல் 4 இடங்களையும் இஷிதா கிஷோர்(நொய்டா), கரிமா லோஹியா, உமா ஹாரதி, ஸ்மிருதி மிஸ்ரா ஆகிய மாணவிகள் பிடித்து சாதனை படைத்துள்ளனர். தமிழகத்தை பொருத்தமட்டில் மொத்தம் 42 மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
சென்னை கொளத்தூரைச் சேர்ந்த ஏ.எஸ்.ஜீ ஜீ என்ற மாணவி மாநில அளவில் முதலிடமும், தேசிய அளவில் 107-வது இடத்தையும் பிடித்துள்ளார். தனது முதல்முயற்சியிலேயே தேர்ச்சி பெற்றுள்ள இவரது தந்தை எலெக்ட்ரிசியன் என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்வு முடிவுகள் வெளியான 15 நாட்களில், தேர்ச்சி பெற்றவர்கள் பெற்ற மதிப்பெண் விவரங்களை யுபிஎஸ்சி வெளியிடும். இதில் தரவரிசை மற்றும் இடஒதுக்கீடு பட்டியல் அடிப்படையில் அவர்களுக்கு பணிகள் ஒதுக்கப்படும் என்று யுபிஎஸ்சி தெரிவித்துள்ளது.
இத்தேர்வில் அகில இந்திய தரவரிசையில் தமிழ்நாடு அரசுகூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயலர்ஜகநாதனின் மகள் சத்ரியா கவின் (169), தமிழ்நாடு அரசு தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்தின் மகள் ஈசானி (290),சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணனின் மகன் அரவிந்த் (361) இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.