திமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த பின்னர் முதல்வர் ஸ்டாலின் தென் சென்னையில் பன்னோக்கு மருத்துவமனை அமைக்கப்படும் என்று அறிவித்தார். முக்கிய அரசு மருத்துவமனைகள் அனைத்தும் வட சென்னையை மையமாகக் கொண்டே உள்ள நிலையில் கொரோனா போன்ற வைரஸ் பரவி நெருக்கடியை உருவாக்கி விடுவதாலும் தென் சென்னையில் பன்னோக்கு மருத்துவமனை அமைக்கப்படும் என்று அறிவித்தார்.
திமுகவின் தேர்தல் அறிக்கையில்கூட இந்த வாக்குறுதி இடம்பெறவில்லை. கிண்டி கிங்ஸ் வளாகத்தில் இந்த மருத்துவனை அமைப்பதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டது. 2021ஆம் ஆண்டு மருத்துவமனை அறிவிப்பு வெளியான நிலையில் தற்போது திறப்பு விழாவுக்கு தயாராக உள்ளது மருத்துவமனை.
இந்த மருத்துவமனையை திறக்க குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரடியாக சென்று அழைப்பு விடுத்தார். ஜூன் 5ஆம் தேதி திறக்க சம்மதித்து நேரம் வழங்கினார் குடியரசுத் தலைவர்.
இந்நிலையில் குடியரசு தலைவர் வருகை ரத்தாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. எனவே வேறு தேதியில் குடியரசு தலைவரை அழைத்து திறக்கலாமா, வேறு தலைவரை வைத்து திறக்கலாமா என்றும் ஆலோசனைகள் நடைபெறுவதாக கூறப்படுகிறது.
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசு தலைவரைக் கொண்டு திறக்காமல் மோடியே திறப்பதற்கு திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசுக்கு திமுக பிற கட்சிகளுடன் இணைந்து நெருக்கடி கொடுப்பதால் குடியரசு தலைவரை வைத்தே திமுக அரசுக்கு நெருக்கடி வழங்கப்படுகிறதா என்றும் கேள்விகள் எழுந்துள்ளன.
மற்றொருபுறம் வெளிநாடு பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் ஸ்டாலின் மே 31ஆம் தேதி தான் சென்னை திரும்புவார். அதன் பின்னரே முக்கிய தலைவர்களை நேரில் சென்று அழைக்க வேண்டியிருக்கும், கலைஞர் நூற்றாண்டு தொடக்கவிழாவையும் நடத்த வேண்டியுள்ளது. இதையெல்லாம் கணக்கில் கொண்டு திமுக அரசே மருத்துவமனை திறப்பை சிலநாள்கள் தள்ளி வைக்க முடிவெடுத்துள்ளதாகவும் சொல்கிறார்கள்.