காண்ட்ராக்ட் ஊழல் பணத்தில் கட்சி பதவி: எடப்பாடியை வெளுத்து வாங்கும் தங்கம் தென்னரசு

நான்காண்டு ஊழல் ஆட்சி நடத்தி அந்த பணத்தின் மூலம் கட்சி பதவியை

பெற்றுள்ளதாகவும், தமிழ்நாட்டில் தொழில் தொடங்கும் நிறுவனங்களை அண்டை மாநிலங்களுக்கு விரட்டியடித்தவர் என்றும் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதல்வர் ஸ்டாலினின் வெளிநாட்டு பயணத்தை கடுமையாக விமர்சித்திருந்தார். முதலீடுகளை ஈர்க்க செல்கிறாரா அல்லது முதலீடு செய்ய செல்கிறாரா என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.

எடப்பாடி பழனிசாமியின் விமர்சனத்துக்கு பதிலளிக்கும் வகையில் நிதியமமைச்சர் தங்கம் தென்னரசு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

“அதிமுக ஆட்சியில் தொழில் வளர்ச்சியை காலில் போட்டு மிதித்து, வர விரும்பிய தொழில் நிறுவனங்களையும் அண்டை மாநிலங்களுக்கு விரட்டி விட்டு ஆட்சி நடத்தியவர் பழனிச்சாமி.

நான்காண்டு கால ஆட்சியில் ஊரெங்கும் ஊழல் என்ற முழக்கத்திற்கு சொந்தக்காரராக – கரன்சி மழையில் நனைந்து, ஊழலின் ஒட்டுமொத்த உருவமாகத் திகழ்ந்தவர் பழனிச்சாமி.

தினமும் எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற பாணியில், முதன்முதலில் டாஸ்மாக் கடையைத் தெருவெல்லாம் திறந்த அதிமுக ஆட்சியை மறந்துவிட்டு, அதிமுக ஆட்சியில் கொத்துக் கொத்தாக கள்ளச்சாராயச் சாவுகள் அரங்கேறியதை வசதியாக மறைத்து, 4 ஆண்டு கள்ளச்சாராயம், குட்கா எனத் தமிழ்நாட்டை போதை மாநிலமாக மாற்றிய பழனிச்சாமி திமுக ஆட்சி பற்றி குறை கூறுகிறார்.

முதலமைச்சர் பொறுப்பைத் தக்கவைக்கப் பணம்; ஓ.பி.எஸ் தகராறில் பொதுக்குழுவைக் கூட்டப் பணம்; அதில் மெஜாரிட்டி உறுப்பினர்களைப் பெறப் பணம்; வேண்டிய தீர்மானத்தை நிறைவேற்றப் பணம்; எல்லாவற்றையும் விட, பொதுச் செயலாளர் பதவியைப் பெற பெட்டி பெட்டியாக பணம் என கட்சி அரசியலையும், அசிங்கமாக அவர் ஆட்சியில் விட்ட காண்டிராக்ட் ஊழல் அரசியல் போல் நடத்திப் பதவியைப் பெற்று, பவனி வந்து கொண்டிருக்கும் பழனிசாமிக்குத் திராவிட முன்னேற்றக் கழகத்தை, முதலமைச்சர் தலைமையில் நடைபெறும் திமுக ஆட்சியை, திராவிட மாடல் முதலமைச்சரைப் பற்றி குறை கூற தகுதியும் இல்லை. தார்மீக உரிமையும் இல்லை” என்று கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.