காந்தி நகர்: குஜராத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில், நள்ளிரவில் நடந்த சம்பவம் பயணிகளிடையே பீதியைக் கிளப்பியுள்ளது. விமான போக்குவரத்துத் துறை அமைச்சருக்கு இது குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், உரிய விசாரணை நடத்தப் பலரும் வலியுறுத்தியுள்ளனர்.
இந்தியாவில் விமானத்துறை இப்போது வேகமாக வளர்வது அனைவருக்கும் தெரியும். ஒவ்வொரு ஆண்டும் விமானத்தில் பயணிப்போரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது.
இருப்பினும், சமீப காலங்களாக விமானத்துறை குறித்து வெளியாகும் தகவல்கள் நன்றாக இல்லை. இது விமானத்தில் பயணிப்போருக்கு அச்சம் தரும் வகையிலேயே உள்ளது. அதுபோன்ற மற்றொரு சம்பவம் இப்போது நடந்துள்ளது.
விமானம்: சண்டிகரில் இருந்து அகமதாபாத் செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த பயணிகளுக்குச் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் திகிலூட்டும் சம்பவம் நடந்துள்ளது. அங்கே ஓடுபாதையில் தரையிறங்கிய சில நொடிகளில் மீண்டும் இண்டிகோ விமானம் மேலே பறந்துள்ளது.
இந்தச் சம்பவம் திங்கள்கிழமை இரவு 9:15 மணிக்கு நடந்துள்ளது. இரவு நேரம் என்பதால் விமானத்தில் இருந்த பயணிகளுக்கு ஒன்றுமே புரியவில்லை. அவர்கள் குழம்பிப்போய்விட்டார்கள். வழக்கமான லேண்டிங் ஆக இருக்கும் என்றே பயணிகள் நினைத்த நிலையில், விமானம் தரையிறங்கிய சில நொடிகளில் மீண்டும் கிளம்பியதால் பயணிகள் திடுக்கிட்டுப் போனார்கள்.
புகார்: இது குறித்து விமானத்தில் பயணித்தோர் கூறுகையில், “இரவு 8.45 மணியளவில் விமானம் கீழே இறங்கத் தொடங்கியது.. ஆனால் சக்கரங்கள் தரையைத் தொட்டவுடன் விமானம் திடீரென மீண்டும் மேலே எழும்பத் தொடங்கியது. எங்களுக்கு அங்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. இதனால் நாங்கள் பீதியடைந்தோம். அதன் பின்னர் சுமார் 20 நிமிடங்கள் கழித்தே விமானம் தரையிறங்கியது” என்றனர்.
இந்தச் சம்பவம் குறித்து பயணிகள் சிலர் மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவிற்கும் இண்டிகோ நிறுவனத்திற்கும் புகார் மெயிலும் அனுப்பியுள்ளனர்.
என்ன நடந்தது: இந்தச் சம்பவம் நடந்த போதே விமானியிடம் அணுகி இது குறித்து சிலர் கேட்டுள்ளனர். அப்போது அவர், இது சிறு தகவல் தொடர்பு பிரச்சனை என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், விமானத்தைத் தரையிறக்க ஏடிசி அனுமதி தரவில்லை என்றும் அதற்கு முன்பு விமானத்தை இறக்கியதால் சில நொடிகளில் புறப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இதைக் கேட்ட பயணிகள் அனைவருக்கும் ஷாக். ஏனென்றால் ஒரு ஏர்போர்ட்டில் எந்த விமானம் எப்போது வர வேண்டும்.. எப்போது கிளம்ப வேண்டும் என அனைத்தையும் முடிவு செய்வது ஏடிசி எனப்படும் ஏர் டிராபிக் கன்ட்ரோல் தான். அவர்கள் அனுமதி தராமல் விமானம் தரையிறங்கினால் அது மோசமான விபத்துகளைக் கூட ஏற்படுத்தும். ஏடிசி அனுமதியின்றி விமானத்தை தரையிறக்கவோ, கிளம்பவோ கூடாது.
அப்படியிருக்கும் போது அனுமதி இல்லாமல் முதலில் விமானம் தரையிறங்கியது ஏன் என்றும் எதற்காக இத்தனை பயணிகளின் வாழ்க்கையை ஆபத்தில் தள்ளுகிறீர்கள் என்றும் பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். அப்போது அங்கிருந்த இண்டிகோ அதிகாரிகள் மெயில் அனுப்ப அறிவுறுத்தினர். அதன்படியே பயணிகள் சிலர் மெயில் அனுப்பியுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.