தென்காசி: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே தனியார் பள்ளி வாகனமும், காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணித்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மேலும் ஒருவர் உயிரிழந்தார். ஐந்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே ஒப்பனையாள்புரம் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் ஒரு காரில் சென்று திருச்செந்தூருக்கு சாமி தரிசனம் செய்துள்ளனர்.
திருச்செந்தூரில் சாமிதரிசனத்தை முடித்துவிட்டு,மீண்டும் சொந்த ஊரான ஒப்பனையாள்புரத்திற்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே வந்து கொண்டிருந்தனர். அப்போது எதிரே பள்ளிக்குழந்தைகளுடன் பள்ளி வேன் ஒன்றும் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் பள்ளி வேன் மீது பயங்கரமாக மோதியது. இதில் கார் முற்றிலும் சிதைந்ததால் அதில் பயணித்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் படுகாயத்துடன் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்,
இதனிடையே இந்த விபத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
விபத்து நடந்த பகுதிக்கு தென்காசி மாவட்ட போலீஸ் சுப்பிரண்டு சாம்சன் நேரில் சென்று ஆய்வு செய்தார். விபத்தில் சிக்கிய வாகனங்கள் பொக்லைன் வாகனம் மூலம் அப்புறப்படுத்தப்பட்டு போக்குவரத்தும் சீர் செய்யப்பட்டது.
இந்நிலையில் பள்ளி வேன் மற்றும் கார் நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் விபத்து தொடர்பான பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி இருக்கிறது. அதில் பெட்ரோல் பங்க் அருகே பள்ளி வேன் திரும்பியபோது, எதிரே வேகமாக வந்த கார், வேன் மீது பயங்கரமாக மோதுவதாக சிசிடிவி காட்சியில் தெரிகிறது. மோதிய வேகத்தில் கார் அப்பளம்போல் நொறுங்கியது. அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டார்கள். இந்த வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.