சட்டைநாதர் கோயில் கும்பாபிஷேகத்தில் தருமையாதீனத்திடம் ஆசி பெற்ற தமிழக ஆளுநர்; களைகட்டும் சீர்காழி!

சீர்காழி சட்டைநாதர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சீர்காழி வருகை தந்து, தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானத்திடம் ஆசி பெற்றதோடு, நாட்டியாஞ்சலி நிகழ்வையும் தொடங்கி வைத்து யாகசாலை பூஜையில் கலந்து கொண்டார்.

தோடுடைய செவியன் என்ற திருப்பதிகம் பாடிய திருஞானசம்பந்தர் பிறந்த ஊரான சீர்காழியில், திருக்கயிலாயப் பரம்பரைத் தருமை ஆதீனத்திற்கு சொந்தமான ஸ்ரீ சட்டைநாதர் சுவாமி திருக்கோயில் உள்ளது. இந்தத் திருக்கோயிலில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று (24.5.23) கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.

சட்டைநாதர் கோவில் கும்பாபிஷேக நிகழ்வில் தமிழக ஆளுநர்

மேலும், கும்பாபிஷேகதில் கலந்துகொள்ள ஆளுநர், பல்வேறு அரசியல் தலைவர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட பலருக்கும் தருமை ஆதீனம் 27வது நட்சத்திர குருமணிகள் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. சில தினங்களுக்கு முன் கோயிலில் கும்பாபிஷேகத் திருப்பணிகளுக்காகக் குழி தோண்டப்பட்ட இடத்தில் தமிழில் செப்பேடுகள், கல்வெட்டுகள், சிலைகள் உள்ளிட்ட வரலாற்றுப் பொக்கிஷங்கள் கிடைக்கப்பெற்று பத்திரப்படுத்தி வைக்கப்பட்டுள்ளன.

மேலும், 40 ஆண்டுகள் கழித்து கோயிலின் மேற்கு கோபுரம் திறக்கப்பட்டு அதனருகே உள்ள நந்தவனத்தில் 82 யாக குண்டங்கள் அமைக்கப்பட்ட யாகசாலையில் கடந்த 20-ம் தேதி முதல் யாகசாலை பூஜை தொடங்கி நடைபெற்று வருகிறது. யாகசாலை நுழைவு வாயில் கயிலாய மலையைப் போல் அமைத்து பக்தர்களைப் பரவசம் அடையச் செய்துள்ளது கோயில் நிர்வாகம்.

சட்டைநாதர் கோயில் கும்பாபிஷேக நிகழ்வு

இந்த நிலையில் தமிழக ஆளுநர் நேற்று சீர்காழிக்கு வருகை தந்தார். நாட்டியாஞ்சலி, திருவாசகம் முற்றோதல், இசை கச்சேரி, வண்ண விளக்குகள் எனப் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சிகளில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இதனால் சீர்காழி நகரே விழா கோலம் பூண்டு களைகட்டத் தொடங்கியுள்ளது.

இன்று காலை எட்டாம் கால யாக பூஜை நிறைவு செய்யப்பட்ட பின் 9.30 மணி அளவில் விமான ராஜ கோபுர கும்பாபிஷேகமும், மூலஸ்தான மஹா கும்பாபிஷேகமும் நடைபெறும். இந்தத் திருத்தலத்தில் 32 ஆண்டுகள் கழித்து கும்பாபிஷேகம் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.