சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் சட்ட விரோதமாக இயங்கிய 15 மதுக்கூடங்களை போலீஸார் மூட நடவடிக்கை எடுத்தனர். மேலும் திறந்தவெளியில் மதுவிற்ற 19 பேரை கைது செய்து, அவர்களிடம் இருந்து 306 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
சிவகங்கை மாவட்டத்தில் சட்டவிரோதமாக மதுக்கூடங்கள் இயங்குவதாகவும், அங்கு அதிகாலையிலேயே மதுப்பாட்டில்கள் விற்பதாகவும் தொடர்ந்து புகார் எழுந்தன. மேலும் சாலைக்கிராமம் பேருந்து நிலையம் அருகே 2 மதுக்கடைகள் இயங்கும் நிலையில், அக்கடைகள் திறக்காத நேரங்களில் மதுக்கூடங்களிலும், அதனையொட்டி திறந்தவெளியிலும் சட்டவிரோதமாக மது விற்பனை நடப்பதாக புகார் எழுந்தது.
இதையடுத்து அப்பகுதியில் செயல்பட்ட 2 மதுக்கூடங்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். இந்நிலையில் ஐஜி அஸ்ரா கார்க், ராமநாதபுரம் சரக டிஐஜி துரை உத்தரவின் பேரில் சிவகங்கை எஸ்பி செல்வராஜ் மேற்பார்வையில் மாவட்டம் முழுவதும் நேற்று போலீஸார் அதிரடியாக மதுக்கூடங்களில் சோதனை நடத்தினர்.
அப்போது சிவகங்கை, மதகுபட்டி, திருப்புவனம், காளையார்கோவில் பகுதியில் தலா 2 மதுக்கூடங்கள், மானாமதுரை பகுதியில் 5, சிங்கம்புணரி, இளையான்குடியில் தலா 1 என 15 மதுக்கூடங்கள் சட்டவிரோதமாக செயல்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை போலீஸார் மூட நடவடிக்கை எடுத்தனர்.
மாவட்டம் முழுவதும் திறந்தவெளியில் 19 இடங்களில் மதுப்பாட்டில்களை விற்ற 19 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 306 மதுப்பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் சட்டவிரோதமாக மது விற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீஸார் எச்சரித்துள்ளனர்.