சீனாவை சமாளிக்க.. உலகிலேயே மிகக் கொடிய தற்காப்புக் கலையை கற்கும் இந்திய ராணுவ வீரர்கள்.. என்ன அது?

புதுடெல்லி:
சீன ராணுவத்தினரின் அத்துமீறலையும், அவர்களின் ஆக்ரோஷமான தாக்குதல்களையும் சமாளிப்பதற்காக உலகிலேயே மிகக் கொடிய தற்காப்புக் கலையாக கருதப்படும் க்ராவ் மகா (Krav Maga) என்ற கலையை இந்திய ராணுவத்தினர் கற்று வருகின்றனர்.

பாகிஸ்தானை போலவே இந்தியாவுக்கு எப்போதும் அச்சுறுத்தலாக இருந்து வரும் நாடு சீனா. பாகிஸ்தான் தீவிரவாதிகளை இந்தியாவுக்கு அனுப்பி பிரச்சினை செய்கிறது என்றால், சீனாவோ தனது நாட்டு ராணுவ வீரர்களை அவ்வப்போது அனுப்பி நமது எல்லைகளை ஆக்கிரமிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. இந்திய மாநிலங்களான லடாக், அருணாச்சலப் பிரதேசம் ஆகியவற்றை வெகுநாட்களாக சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது.

இந்தப் பகுதிகளை ஆக்கிரமிக்க பல ஆண்டுகளாக சீனா முயற்சித்து வருகிறது. இதற்காக அவ்வப்போது தனது ராணுவத்தினரை அனுப்புவதும், பின்னர் நீண்ட போராட்டங்களுக்கு பிறகு அவர்களை வெளியேற்றுவதும் தொடர்கதையாகி வருகிறது. ஆனால், அவ்வாறு சீன ராணுவத்தினர் வெளியேறும் போது முழுமையாக வெளியேறுவதில்லை. நமது எல்லைகளை சிறிது சிறிதாக ஆக்கிரமித்து கொள்கின்றனர் என்பதே வேதனையான உண்மை.

தொடரும் சீன அத்துமீறல்:
கடந்த 2020-ம் ஆண்டு லடாக்கில் புகுந்த சீன ராணுவ வீரர்கள், நமது ராணுவ வீரர்கள் 20 பேரை அடித்துக் கொலை செய்தனர். இந்த மோதலில் சீனாவை சேர்ந்த 30 வீரர்கள் கொல்லப்பட்டனர். சில மாதங்களுக்கு முன்பு கூட மிகப்பெரிய தாக்குதல் நடத்தும் நோக்கில் அருணாச்சலப் பிரசேததுக்குள் நூற்றுக்கணக்கான சீன ராணுவத்தினர் நுழைந்தனர். பின்னர் அவர்கள் இந்திய படையினரால் விரட்டியடிக்கப்பட்டனர். இவ்வாறு சீனா தொடர்ந்து அத்துமீறி வருவதால் அதனை சமாளிக்க இந்திய ராணுவத்தினருக்கு சில பிரத்யேக பயிற்சிகளை வழங்க மத்திய அரசு முடிவு செய்தது.

கொடிய தற்காப்புக் கலை:
அந்த வகையில்தான், உலகிலேயே மிகவும் ஆபத்தான மற்றும் கொடிய தற்காப்புக் கலையான ‘க்ராவ் மகா’ இந்திய ராணுவத்தினருக்கு கற்றுக்கொடுக்கப்பட்டு வருகிறது. பொதுவாக, இந்தியா – சீனா இடையே போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி எல்லைப் பகுதிகளில் துப்பாக்கியை பயன்படுத்தக் கூடாது என்ற விதி உள்ளது. அதனால்தான், கிரிக்கெட் மட்டை, இரும்பு ராடு ஆகியவற்றுடன் சீனப் படையினர் நுழைகின்றனர். இவ்வாறு ஆயுதங்களுடன் வருபவர்களை 5 முதல் 10 நொடிகளில் க்ராவ் மகா தற்காப்புக் கலை தெரிந்தவரால் வீழ்த்த முடியும்.

மரண அடி:
இது இஸ்ரேல் நாட்டின் தற்காப்புக் கலை ஆகும். மேலும், கராத்தே, குங்பூ போல பாரம்பரிய கலையோ, ஸ்டேஜ் சண்டையோ (stage fight) கிடையாது. மாறாக, முழுக்க முழுக்க நிஜ சூழலில் நடைபெறும் சண்டைகளை அடிப்படையாக வைத்து கண்டுபிடிக்கப்பட்ட தற்காப்புக் கலைதான் ‘க்ராவ் மகா’. கராத்தே, பாக்சிங், ஜூடோ, அய்க்கிடோ ஆகிய கலைகளின் கூட்டுக்கலவை தான் இந்த க்ராவ் மகா. 2 – 3 தாக்குதல்களில் எதிரியின் உயிரை க்ராவ் மகா நிபுணரால் பறித்துவிட முடியும். 1948-ம் ஆண்டு முதல் இஸ்ரேல் ராணுவ வீரர்களுக்கு ‘க்ராவ் மகா’ கற்றுக்கொடுக்கப்பட்டு வருகிறது.

இஸ்ரேலை பாதுகாக்கும் கலை:
உலகில் வலிமையான ராணுவத்தில் ஒன்றாக இஸ்ரேல் ராணுவம் திகழவும், உலகிலேயே மிக ஆபத்தான உளவு அமைப்பாக மொசாட் (Mossad) விளங்கவும் ‘க்ராவ் மகா’ தான் அடிப்படை என்பதை உலக நாடுகள் தாமதாகவே தெரிந்து கொண்டன. அதீத உடல் வலிமையையும், மன வலிமையையும் தரக்கூடியது க்ராவ் மகா. ஆரம்பத்தில் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்த இந்த தற்காப்புக் கலை பின்னர் உலகம் முழுவதும் பரவத் தொடங்கியது. அநத் வகையில், தற்போது இந்திய ராணுவ வீரர்களும், இந்தோ திபெத் போலீஸ் படைக்கும் இந்த தற்காப்புக் கலை கற்றுக் கொடுக்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.