தற்போது கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. அதிலும் குறிப்பாக கத்திரி வெயில் எனும் அக்னி நட்சத்திரம் காரணமாக பல்வேறு பகுதிகளில் வெயில் சுட்டெரித்து வருகிறது.
இந்த நிலையில் இந்தியா முழுவதும் கடுமையான வெப்பம் வாட்டி வதைத்து வந்த நிலையில், இன்றுடன் வெப்ப அலை முடிவடைந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதைத்தொடர்ந்து இன்னும் 2 நாட்களில் தென்கிழக்கு வங்காள விரிகுடா, நிக்கோபார் தீவுகள் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் தென்மேற்கு பருவமழை பெய்யத் தொடங்கும் என்றும், அதற்கான சூழல் நிலவுவதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் இன்று 12 இடங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி பதிவாகியுள்ளது. அந்த வகையில் சென்னையில் 105 பாரான்ஹீட்டும், திருத்தணி மற்றும் வேலூரில் 104 பாரான்ஹீட்டும், திருச்சி மற்றும் மதுரையில் 102 பாரான்ஹீட்டும், கரூர் மற்றும் பாளையங்கோட்டையில் 101 பாரான்ஹீட்டும், கடலூர் ஈரோடு தஞ்சாவூர் திருப்பத்தூர் நாகப்பட்டினம் ஆகிய இடங்களில் 100 பாரான்ஹீட்டும் வெயில் பதிவாகியுள்ளது.