தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே தனியார் பள்ளி வேனும், காரும் மோதிக்கொண்ட கோர விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்த சம்பவம் அரங்கேறி உள்ளது.
மேலும் இந்த விபத்தில் பள்ளி வேனில் பயணம் செய்த நான்கு பள்ளி மாணவர்கள் படுகாயம் அடைந்துள்ளதாக முதல் கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று விட்டு சங்கரன்கோவில் நோக்கி வந்து கொண்டிருந்த காரும், சங்கரன்கோவில் இருந்து தனியார் பள்ளி வேன் ஒன்று பணவடலிசத்திரம் நோக்கி சென்று கொண்டிருந்தது.
திடீரென பணவடலிசத்திரம் அருகே பள்ளி வேன் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் எதிர் திசையில் திரும்ப, எதிரே அதிவேகமாக வந்த கார் பள்ளி வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த கோரா விபத்தில் காரில் இருந்த ஐந்து பேரும் உயிரிழந்தனர். மேலும் பள்ளி வாகனத்தில் பயணம் செய்த நான்கு மாணவர்கள் படுகாயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பள்ளி மாணவர்கள் அனைவரும் ஒன்பதாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று, அடுத்த கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பயில இருந்த மாணவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், சிறப்பு வகுப்பு என்ற பெயரில் இந்த தனியார் பள்ளி இயங்கி வந்துள்ளது இந்த விபத்தின் மூலம் தெரியவந்துள்ளது.
தமிழக அரசு சிறப்பு வகுப்புகள் நடத்த அனுமதி கிடையாது என்று ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில், அதனை மீறி இந்த தனியார் பள்ளி செயல்பட்டு இருப்பது அம்பலம் ஆகியுள்ளது. இது குறித்து வட்டாட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தரப்பில் விசாரணை மேற்கொண்டு அந்த பள்ளி மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை வலுத்துள்ளது.