தென்காசி மாவட்டம், பந்தப்புளி கிராமத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் காரில் திருச்செந்தூர் கோயிலுக்குச் சென்றிருக்கின்றனர். அங்கு வழிபாடு முடித்துவிட்டு இன்று மாலை சொந்த ஊருக்குத் திரும்பி வந்துகொண்டிருந்தார்கள். அவர்களின் கார் பனவடலிசத்திரத்தைக் கடந்து வந்துகொண்டிருந்தபோது, எதிரே வந்த பள்ளி வேன்மீது நேருக்கு நேராக மோதி விபத்து ஏற்பட்டிருக்கிறது.
சாலையில் வேகமாக வந்த பைக்மீது மோதாமல் இருப்பதற்காக வேன் ஓட்டுநர் திருப்பியபோது, எதிர்பாராத வகையில் காரின்மீது மோதியதாகக் கூறப்படுகிறது. இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த குருசாமி (45), அவரின் மனைவி வேலுத்தாய் (35), மாமியார் உடையம்மாள் (60), குருசாமியின் மகன் மனோஜ்குமார் (22) ஆகிய நான்கு பேர் உயிரிழந்தனர். வேன் ஓட்டுநர் ஐயப்பன் என்பவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கோடை விடுமுறையையொட்டி தமிழகம் முழுவதுமுள்ள அரசு மற்றும் தனியார்ப் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருக்கிறது. ஆனாலும், சில தனியார்ப் பள்ளிகள் அரசின் விதிமுறைகளைக் காற்றில் பறக்கவிட்டு இயங்கி வருவதாகக் குற்றச்சாட்டு உள்ளது. இந்த நிலையில் சங்கரன்கோவில் – கழுகுமலை சாலையில் செயல்பட்டுவரும் மகாலட்சுமி மெட்ரிகுலேஷன் பள்ளியில் ப்ளஸ் ஒன், ப்ளஸ் டூ மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடந்துள்ளன.
மாலையில் வகுப்புகள் முடிந்து மாணவர்களை அவர்களின் கிராமங்களுக்கு அழைத்துச் சென்றபோது, இந்த விபத்து நடந்திருக்கிறது. இந்த விபத்தில் நான்கு மாணவர்களுக்கும் லேசான காயம் ஏற்பட்டிருக்கிறது. காயமடைந்தவர்கள் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இறந்தவர்களின் உடல்களும் அதே மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டன. சம்பவம் குறித்து பனவடலி சத்திரம் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தினார்கள்.
தகவலறிந்து தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை.ரவிச்சந்திரன், கோட்டாட்சியர் சுப்புலட்சுமி, சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா உள்ளிட்டோர் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று நடந்த சம்பவங்கள் குறித்து விசாரித்தனர். இதனிடையே, இந்த விபத்து நடந்த இடத்தின் அருகில் சிசிடிவி-யில் பதிவான காட்சிகளும் வெளிவந்துள்ளன.
அரசு விதிகளை மீறி தனியார்ப் பள்ளி செயல்பட்ட சம்பவம் குறித்து கல்வித்துறை அதிகாரிகளும் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இந்த கோர விபத்து காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பலியானதால் பந்தப்புளி ரெட்டியார்பட்டி கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.