சென்னை: தேசிய சகோதரர்கள் தினத்தையொட்டி முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேரன்கள் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் திமுக நிர்வாகிகளிடையே ஆனந்த கண்ணீரை வரவழைக்கிறது.
அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே, அண்ணன் என்ன தம்பி என்ன சொந்தம் என்ன பந்தம் என்ன உள்ளிட்ட பாடல்களை கேட்டிருப்போம். அது உடன்பிறந்தவர்களின் துரோகத்தை குறிக்கிறது.
ஒரு தாய் வயிற்றில் பிறந்தவர்கள், ஒரு தாய் வயிற்றில் பிறந்தவர்களுக்கு பிறந்தவர்கள் என பல இடங்களில் ஒற்றுமையாகத்தான் இருக்கிறார்கள். அவர்களின் பாசத்தை சொல்வதுதான்.. நம்மை போல நெஞ்சம் கொண்ட அண்ணன் தம்பி யாருமில்லை என்ற தர்மத்தின் தலைவன் பாடல்.
இந்த பாடல் வரிகளை ரஜினிகாந்தே, பிரபுவுக்காக பாடலாசிரியரிடம் எழுத சொன்னதாக நினைவலைகள் உள்ளன. தம்பி உடையான் படைக்கு அஞ்சான்…. என்பதையும் கேள்விப்பட்டிருப்போம். அண்ணன் தம்பி உறவுகளால் பின்னி பிணையப்பட்ட பல படங்கள் வந்துள்ளன. தர்மத்தின் தலைவன், வீரம், வானத்தை போல, ஆனந்தம் உள்ளிட்ட படங்கள் உள்ளன.
அது போல் அண்மையில் வெளியான வாரிசு திரைப்படத்தையும் சொல்லலாம். இதெல்லாம் எதற்காக சொல்கிறேன் என்றால் இன்றைய தினம் சகோதரர்கள் தினமாம்! என்னதான் தினமும் சண்டையிட்டுக் கொண்டாலும் இது போன்ற நாட்களில் ஒற்றுமையாக இருக்க வேண்டும். இந்த தினத்தையொட்டி அண்ணன்- தம்பிகள் மாறி மாறி அன்பை பரிமாறிக் கொள்கிறார்கள்.
அந்த வகையில் சகோதரர்கள் தினம் கொண்டாட்டம் குறித்த ஒரு படத்தை நடிகர் அருள்நிதி தமிழரசு வெளியிட்டுள்ளார். அதில் தயா அழகிரி, உதயநிதி ஸ்டாலின், அருள்நிதி தமிழரசு ஆகிய மூவரும் ஒன்றாக அமர்ந்து சிஎஸ்கே மேட்ச் பார்த்த புகைப்படம் வெளியாகியுள்ளது. இது எப்போது எடுத்த படம் என தெரியவில்லை, ஆனால் இந்த படத்தை வெளியிட்டு அருள்நிதி தேசிய சகோதரர்கள் தின வாழ்த்துகள் என கூறியுள்ளார்.
இதை பார்க்கும் மு.க.அழகிரி, மு.க.ஸ்டாலின் ஆதரவாளர்கள் ஆஹா! இப்படி மூவரும் ஒன்றாக உள்ளதே கண்கொள்ளா காட்சி என புகழாரம் சூட்டியுள்ளனர். இன்னும் சிலர் திருஷ்டி சுத்தி போடணும் என்றுள்ளனர். அண்ணன் தம்பிகளான மு க அழகிரிக்கும் மு க ஸ்டாலினுக்கும் இடையே சுமுகமான உறவு இல்லை என்பது அனைவருக்குமே தெரியும். கடந்த 2014 ஆம் ஆண்டு தனது தம்பிக்கு முக்கியத்துவம் கொடுப்பதை அண்ணன் அழகிரி எதிர்த்ததால் அவர் கட்சியில் இருந்து கருணாநிதியால் நீக்கப்பட்டார்.
அதன்பின்னர் கட்சியில் சேர எத்தனையோ முயற்சி செய்தும் அழகிரியால் திமுகவில் சேர இயலவில்லை. இருவரும் பேசிக் கொள்வது கூட கிடையாது என்றுதான் சொல்கிறார்கள். ஆனால் ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற போது அழகிரி, ஸ்டாலினுக்கு வாழ்த்து சொன்னார், அது போல் பதவியேற்பு விழாவுக்கு ஸ்டாலின், அழகிரியை அழைத்திருந்தார்.
இதற்காக அழகிரி தனது மகள் கயல்விழி, மகன் தயா அழகிரியை அனுப்பியிருந்தார். அப்போது அந்தவிழாவில் உதயநிதியும் தயா அழகிரியும் கட்டி அணைத்து எடுத்த படம் வைரலானது. அது போல் அமைச்சராக உதயநிதி பொறுப்பேற்றுக் கொண்டவுடன் மதுரைக்கு சென்ற உதயநிதி, தனது பெரியப்பா அழகிரி, பெரியம்மா காந்தி ஆகியோரின் கால்களில் விழுந்து ஆசி பெற்றார். அழகிரியும் தம்பி மகனை உச்சி முகர்ந்து பாசத்தை பொழிந்தார்.
என்னதான் பெரியவர்களுக்குள் பிரச்சினை இருந்தாலும் குழந்தைகள் என்ன செய்தார்கள் என்பதுதான்! இதை பெரியவர்களும் உணர்ந்து சிறியவர்களும் உணர்ந்ததன் விளைவுதான் இந்த புகைப்படங்கள், நேரடி விசிட்கள் எல்லாமே! இந்த மூன்று சகோதரர்களின் புகைப்படம் வைரலாகி வருகிறது.