நாடாளுமன்ற புதிய கட்டிடத்தை திறந்து வைக்கும் பிரதமரிடம் தமிழகத்தின் வரலாற்று சிறப்பு மிக்க செங்கோல் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார், உள்துறை அமைச்சர் அமித் ஷா. அந்த செங்கோலின் சிறப்பையும் வரலாற்றையும் எடுத்துக் கூறுகிறது இந்த செய்தித் தொகுப்பு….
சொக்கத் தங்கத்தினால் ஆன இந்த செங்கோல் தான் நாடாளுமன்ற புதிய கட்டிடத்தை திறந்து வைக்கும் பிரதமர் நரேந்திர மோடியிடம் வழங்கப்பட உள்ளது. பிரதமர் இதை புதிய கட்டிடத்தில் சபாநாயகரின் இருக்கை அருகே வைப்பார் என்று தெரிவித்த உள்துறை அமைச்சர் அமித் ஷா, நீதி நெறி தவறாமல், எந்தச் சார்பும் இல்லாமல் ஆட்சி நடத்துவதை செங்கோல் பிரதிபலிப்பதாக குறிப்பிட்டார்.
இந்த செங்கோலின் பின்னணியில் பல நூறு ஆண்டுகளின் வரலாறு உள்ளது. 1947-இல் இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்கும் வேளை நெருங்கிய போது, ஆட்சி மாற்றத்தை எதன் மூலம் குறிப்பது என்று பிரிட்டிஷ் அரசின் அப்போதைய கவர்னர் ஜெனரல் லார்ட் மவுன்ட் பேட்டன் ஜவஹர்லால் நேருவிடம் கேள்வி எழுப்பினார். இது பற்றி மூதறிஞர் ராஜாஜியிடம் நேரு ஆலோசித்த போது, முற்கால தமிழ்நாட்டில் மன்னர்கள் ஆட்சிப் பொறுப்பு ஏற்ற போது செங்கோல் வழங்கும் பழக்கத்தைப் பற்றி குறிப்பிட்டு, அதையே இப்போதும் செய்யலாம் என்று யோசனை கூறினார் ராஜாஜி. இதை நேருவும் ஏற்றுக் கொண்டதை அடுத்து, செங்கோலை உருவாக்கும் பொறுப்பு திருவாடுதுறை ஆதீனம் அம்பலவான தேசிகரிடம் வழங்கப்பட்டது.
திருவாடுதுறை ஆதீனத்தைச் சேர்ந்த குமாரசாமி தம்பிரான், மாணிக்கம் ஓதுவார் ஆகியோர் சிறப்பு விமானத்தில் டெல்லிக்குச் சென்று 1947 ஆகஸ்ட் 14-ஆம் தேதி இரவு 11-45 மணிக்கு செங்கோலை மவுன்ட் பேட்டனிடம் இருந்து வாங்கி நேரு கையில் வழங்கினார். டி.என். ராஜரத்தினம் நாதஸ்வரம் ஒலிக்க அரசியலமைப்பு நிர்ணய மன்றத்துக்கு உரிய மரியாதையுடன் கொண்டு சென்று வைக்கப்பட்டது. பின்னர் அலகாபாத் அருங்காட்சியகம் ஒன்றில் இதுவரை வைக்கப்பட்டு இருந்தது. தற்போது பிரதமர் கையில் தவழ்ந்து புதிய நாடாளுமன்ற கட்டிடத்துற்குள் மீண்டும் ராஜ மரியாதையுடன் நுழைய உள்ளது.
அழகிய வேலைப்பாடுகளுடன் சொக்கத் தங்கத்தால் செய்யப்பட்டுள்ள இந்த செங்கோலின் தலைப் பகுதியில் சிவனின் வாகனமான நந்தி இடம் பெற்றுள்ளது. சென்னையில் உள்ள நகை வடிவமைப்பாளர் ஒருவர் உருவாக்கிய இது, 8-ஆம் நூற்றாண்டின் சோழ மன்னர்கள் பயன்படுத்திய செங்கோலை மாதிரியாக கொண்டு தயாரிக்கப்பட்டதாகும்.