பிரித்தானியாவிற்குள் அகதி அந்தஸ்து பெற்றுக்கொள்வதற்காக இலங்கையர்கள் உள்ளிட்ட பலர் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
பிரித்தானியாவை மையமாகக் கொண்டு இயங்கி வரும் பிரதான ஆங்கில ஊடகம் ஒன்று இந்த விடயத்தினை அம்பலப்படுத்தியுள்ளது.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த நெல் விவசாயியான ராதா என்பவர் பிரித்தானியாவிற்கு செல்வதற்காக 50,000 ஸ்ரெலிங் பவுண்ட்களை முகவர் ஒருவரிடம் கொடுத்து அங்கு சென்றுள்ளார்.
அம்பலமான தகவல்
இதன்போது கொழும்பு விமான நிலையத்தை அடைந்தபோது அறிமுகம் இல்லாத பெண் ஒருவரை காண்பித்து அவருக்கு கணவராக நடிக்குமாறும், சிறுவனை காண்பித்து அவருக்கு தந்தையாக நடிக்குமாறும் முகவர்கள் கூறியுள்ளமையும் தெரியவந்துள்ளது.
இவ்வாறு போலி உறவு முறைகளுடன் பிரித்தானியாவிற்குள் பிரவேசித்து அகதி அந்தஸ்து பெற்றுக்கொள்ள முயற்சிக்கப்படுவதாகவும் சட்டவிரோத ஆட்கடத்தல்காரர்கள் இவ்வாறு மக்களை நெருக்கடிக்குள் ஆழ்த்தி விடுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் வழங்கப்படும் தொழில்வாண்மை விசா நடைமுறையை பயன்படுத்தி மோசடிகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
தொழில் வாண்மையுடைய விசா பெற்றுக்கொண்ட நபர், வேறும் நபர்களை தன்னில் தங்கி வாழ்பவராக நாட்டுக்குள் கடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆபத்தான முயற்சி
இதனை தொடர்ந்து ஒருவரின் பெயரில் காணப்படும் விசாவை கொண்டு அவரது மனைவி அல்லது வேறு முக்கிய உறவு எனக்குறிப்பிட்டு பெருந்தொகை பணத்தை அளவீடு செய்து, அவர்கள் பிரித்தானியாவிற்குள் அழைத்துவரப்பட்டு நிர்கதியாக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
தொழில் வாய்ப்பு ஒன்றை பெற்றுக்கொண்டு கனடாவில் நிரந்தர பதிவுரிமை பெற்றுக்கொள்ள முடியும் என்ற கனவில் தாம், வாழ் நாள் முழுவதும் உழைத்த சொத்துக்களை இவ்வாறு ஆபத்தான ஓர் முயற்சியில் முதலீடு செய்வதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கையரை தனது கணவர் என பிரித்தானியாவிற்குள் அழைத்து சென்ற பெண் ஒருவர் தற்பொழுது காணவில்லை எனவும், ராதா ஏதிலி அந்தஸ்து கோரி விண்ணப்பம் செய்து பெரும் நெருக்கடிகளை சந்தித்து வருவதாகவும், அவரது நண்பர்கள் அவருக்கு உதவி செய்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
திருமதியென அடையாளப்படுத்தப்பட்ட மற்றும் ஒரு இலங்கைப் பெண் 65,000 ஸ்ரெலிங் பவுண்ட் கொடுத்து பிரித்தானியாவிற்குள் பிரவேசித்துள்ளார்.
குறித்த பெண் பிரவேசிக்கும் போது 12 வயதான ஒரு சிறுவனை அவரது மகனாக கூறுமாறும் முகவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இறுதி நேரத்தில் விமான நிலையத்தில் இவ்வாறு கோரிக்கை விடுத்த காரணத்தினால் தன்னால் மறக்க முடியவில்லை என அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.
குறித்த பெண் பிரித்தானிய விமான நிலையத்தை சென்றடைந்ததும் அந்த சிறுவன் சிலரினால் அழைத்துச் செல்லப்பட்டதாக அதன் பின்னர் எப்பொழுதும் அவரை சந்தித்தவில்லை எனவும் குறித்த பெண் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பெண்ணுக்கு ஆங்கில மொழி பேசவோ எழுதவோ தெரியாத நிலையில் அவருக்கு ஆங்கிலத்தில் சிறந்த பெறுபேறு உண்டு என போலி சான்றிதழ்களை முகவர்கள் தயாரித்து கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
தாதிய சேவையில் சான்றிதழ் காணப்படுவதாகவும் பொலிஸ் சான்றிதழ் ஒன்று தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டதாகவும், இவ்வாறு பல்வேறு மோசடிகள் இடம்பெற்றதாகவும் அந்த பெண் குறிப்பிட்டுள்ளார்.
வினோதன் என்ற மற்றுமோர் இலங்கையரும் இவ்வாறு பிரித்தானியாவில் ஏதிலி அந்தஸ்துக்கு ஒரு விண்ணப்பம் செய்துள்ளார்.
பிரித்தானியாவிற்குள் பிரவேசிப்பதற்கு வினோதன் 26000 ஸ்ரெலிங் பவுண்ட்களை செலுத்தியுள்ளார்.
முழு நேர வேலை வாய்ப்பு பெற்றுத்தருவதாக முகவர்கள் உறுதியளித்தனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனது தாத்தா பாட்டிமாரின் மூன்று தலைமுறை தங்க ஆபரணங்களை விற்று நல்ல எதிர்காலத்தை தேடி பிரித்தானியாவிற்குள் பிரவேசித்ததாகவும் அந்த அனைத்து முயற்சிகளும் பாழாகிவிட்டதாகவும் வினோதன் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
குற்றவாளி கும்பல்கள் பிரித்தானிய விசா நடைமுறையை துஸ்பிரயோகம் செய்து பெரும் அளவில் பணம் மீட்டுவதாகவும், அதிக எண்ணிக்கையிலான மக்களின் வாழ்க்கையை இருளடையச் செய்வதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.