புதுடெல்லி: புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிப்பது என்ற முடிவை எதிர்க்கட்சிகள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி வரும் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்க இருக்கிறார். இந்த விழாவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. குடியரசுத் தலைவரையும், குடியரசு துணைத் தலைவரையும் மத்திய அரசு புறக்கணித்துள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ள காங்கிரஸ் உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள், நாடாளுமன்ற புதிய கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்கப் போவதாக கூட்டாக இன்று அறிவித்தன.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, “புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழா என்பது வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வு. இதை அரசியலாக்கக்கூடாது. அது நல்லதல்ல. இது அரசியல் செய்யும் நேரம் அல்ல. ஏறக்குறைய 100 வருடங்களுக்குப் பிறகு புதிய நாடாளுமன்றக் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு அது திறக்கப்பட உள்ளது. திறப்பு விழாவை புறக்கணிப்பது என்பது பிரச்சினை இல்லாத ஒன்றை பிரச்சினையாக்குவதாகும். நான் மீண்டும் ஒருமுறை அவர்களிடம் வேண்டுகோள் விடுக்கிறேன். எதிர்க்கட்சிகள் தங்கள் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். வரலாற்றுச் சிறப்பு மிக்க அந்த நிகழ்வில் அவர்கள் தயவுகூர்ந்து கலந்து வேண்டும்.
நாடாளுமன்றம் என்பது சபாநாயகரின் அதிகாரத்திற்கு உட்பட்டது. நாடாளுமன்றக் கட்டிடத்தை திறந்து வைக்க பிரதமர் நரேந்திர மோடியை சபாநாயகர் அழைத்துள்ளார். அதன்பேரில், பிரதமர் மோடி கட்டிடத்தை திறந்து வைக்க உள்ளார். இது குடியரசுத் தலைவரையோ, குடியரசு துணைத் தலைவரையோ அவமதிப்பதாக ஆகாது” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, குடியரசுத் தலைவருக்கு அழைப்பு விடுக்கப்படாதது குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அமித் ஷா, “இந்த விவகாரத்தை நாங்கள் அரசியலாக்க மாட்டோம். இதை மக்களின் முடிவுக்கே விட்டுவிடுகிறோம்” எனத் தெரிவித்திருந்தார்.