பெங்களூரு: புதிய நாடாளுமன்றக் கட்டிடத் திறப்பு விழாவுக்கு குடியரசுத் தலைவரை அழைக்காமல், பாஜகவினர் அவமதித்துவிட்டதாக காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கர்நாடகாவில் உள்ள குல்பர்காவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “பாஜகவினர் பட்டியலின, பழங்குடியின வகுப்பினரை பெயரளவுக்கு மட்டுமே மதிக்கிறது. அவர்களின் வாக்குகளை பெறுவதற்காக ஓரிருவருக்கு பொறுப்புகளை வழங்கப் படுகிறது. ஆனால் மதிக்க வேண்டிய இடத்தில் அவர்களை அவமதிப்பதை பாஜக வழக்கமாக கொண்டுள்ளது. புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் திறப்பு விழாவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அழைக்கப்படவில்லை.
அவரை அழைக்காதது ஏன் என பிரதமர் நரேந்திர மோடி பதிலளிக்க வேண்டும். கட்டப்பட்டுள்ள இந்த நாடாளுமன்றத்தின் அடிக்கல் நாட்டு விழாவுக்கு அப்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தையும் பாஜக அழைக்கவில்லை. இதன்மூலம் பட்டியலின, பழங்குடியின வகுப்பினரை பாஜக புறக்கணித்துள்ளது.
சமூக நீதி கடைப்பிடிக்கப்படும்: கர்நாடக அமைச்சரவையில் சமூக நீதியின் அடிப்படையில் அனைத்து வகுப்பினருக்கும் பிரதிநிதித்துவம் வழங்கப்படும். சிறு சாதிகளுக்கும் அமைச்சரவையில் இடமளிக்கப்படும். மிகவும் பின்தங்கியுள்ள கல்யாண கர்நாடக பகுதியை சேர்ந்த 3 அல்லது 4 பேருக்கு அமைச்சரவையில் இடமளிக்கப்படும்” என்று அவர் கூறினார். | வாசிக்க > புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட 19 கட்சிகள் கூட்டாக அறிவிப்பு