புதிய பார்லி. கட்டிடம் பிரதமர் மோடி, ஓம் பிர்லா முன்னிலையில் நாட்டுக்கு அர்ப்பணிப்பு.!!

நாடாளுமன்ற புதிய கட்டிடம் 65 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில், முக்கோண வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. மக்களவையில் 888, மாநிலங்களவையில் 384 என இருக்கைகள் அமைகின்றன

இந்நிலையில், நாடாளுமன்ற புதிய கட்டிடம் வருகிற 28-ம் தேதி திறக்கப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் சமீபத்தில் தெரிவித்தன. மக்களவை செயலகமும் சமீபத்தில் இதனை உறுதிப்படுத்தியது. எனினும், புதிய நாடாளுமன்ற கட்டிடம் ஜனாதிபதியால் திறந்து வைக்கப்பட வேண்டும் என்றும் பிரதமரால் அல்ல என்றும் ராகுல் காந்தி சமீபத்தில் கூறினார். இதனால் சர்ச்சை ஏற்பட்டது.

இந்த நிலையில், மக்களவை செயலகம் வெளியிட்டு உள்ள அதிகாரப்பூர்வ அழைப்பிதழில், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா முன்னிலையில், பிரதமர் மோடியால் புதிய நாடாளுமன்ற கட்டிடம் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படும் நிகழ்ச்சி நடைபெறும் என தெரிவிக்கின்றது. இந்த நிகழ்ச்சி வருகிற மே 28-ம் தேதி மதியம் 12 மணியளவில் நடைபெறும்.

பாராளுமன்ற மக்களவை பொது செயலாளர் உத்பல் குமார் சிங், இந்த அழைப்பிதழை எம்.பி.க்கள் உள்பட பல்வேறு அதிகாரிகளுக்கும் அனுப்பி உள்ளார். இந்த முடிவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவும், பிரதமர் மோடி தலைமையிலான அரசை சாடினார். இதேபோன்று, ராஷ்டீரிய ஜனதா தள தலைவர் மனோஜ் குமார் ஜா, இந்திய கம்யூனிஸ்டு கட்சி தலைவர் டி. ராஜா, ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி தலைவர் ஒவைசி உள்ளிட்டோரும் மத்திய அரசுக்கு எதிராக விமர்சனங்களை வெளியிட்டு உள்ளனர்.

எனினும், இதற்கு மத்திய நகர்ப்புற வளர்ச்சி துறை மந்திரி ஹர்தீப் சிங் பூரி வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ஜனாதிபதி நாட்டின் தலைவராக இருக்கிறார். அரசின் தலைவராக பிரதமர் இருக்கிறார். அரசு சார்பாக பாராளுமன்ற நிகழ்வை வழிநடத்தி செல்கிறார். ஜனாதிபதி இரு அவையிலும் உறுப்பினராக இல்லை. ஆனால், பிரதமர் உறுப்பினராக இருக்கிறார் என தெரிவித்து உள்ளார். புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்கும் முடிவில் பல எதிர்க்கட்சிகள் உள்ளன என தகவல் தெரிவிக்கின்றது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.