புதுடெல்லி: வரும் 2024 மக்களவை தேர்தலில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சி புதிய உருவம் எடுக்கிறது. இதில், காங்கிரஸுக்கு முன் நிபந்தனைகள் விதிப்பது தொடர்பாக பிற எதிர்க்கட்சி தலைவர்களை சந்திக்கிறார் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால்.
பாஜகவிற்கு எதிராக, எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க ஐக்கிய ஜனதா தளம் தலைவரும் பிஹார் முதல்வருமான நிதிஷ்குமார் களம் இறங்கியுள்ளார். காங்கிரஸுடன் கைகோக்க திரிணமூல் காங்கிரஸின் மம்தா பானர்ஜி, பாரத் ராஷ்டிர சமிதியின் கே.சந்திரசேகர ராவ், ஆம் ஆத்மி கட்சியின் அர்விந்த் கேஜ்ரிவால் ஆகியோர் கடுமையாக எதிர்த்து வந்தனர்.
தற்போது இக்கட்சிகளின் தலைவர்களுக்கு பல்வேறு வகைகளில் பாஜகவால் வந்த நெருக்கடி காரணமாக, வேறுவழியின்றி காங்கிரஸுடன் சேர நிதிஷிடம் சம்மதம் தெரிவித்திருந்தனர். இச்சூழலில், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைப்பு டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலால் புதிய உருவம் எடுக்கத் தொடங்கி உள்ளது. இதர எதிர்க்கட்சிகள் காங்கிரஸுக்கு சில நிபந்தனைகள் விதிக்க விரும்புகின்றன.
ஏனெனில், ஏற்கெனவே ஊழல் புகாரில் சிக்கிய அர்விந்த் கேஜ்ரிவாலின் டெல்லி அரசுக்கு பாஜகவால் ஏற்பட்டுள்ள நெருக்கடி தற்போது உச்சத்தை அடைந்துள்ளது. டெல்லி அரசு அதிகாரிகளை கட்டுப்படுத்தும் அதிகாரத்தை ஆம் ஆத்மி அரசு, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து பெற்றது.
ஆனால் மத்திய அரசு அவசர சட்டம் இயற்றி, இதற்கு தடை ஏற்படுத்தி விட்டது. இதனால் சிக்கலுக்குள்ளான முதல்வர் கேஜ்ரிவால், காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சிகளின் உதவியை நாடத் தொடங்கி உள்ளார். இதற்காக அவர் நேற்று கொல்கத்தாவில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்தார்.
இந்த சந்திப்பில் காங்கிரஸுடன் கைகோக்க எதிர்க்கட்சிகள் சில நிபந்தனைகள் விதிக்க வேண்டும் என திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. டெல்லியில் முதல்வர் கேஜ்ரிவாலுக்கு எதிராக மத்திய அரசு கொண்டுவந்துள்ள அவசர சட்டத்தை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல், டெல்லி, தெலங்கானா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் மத்திய புலனாய்வு அமைப்புகளின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவும் எதிர்க்கட்சிகள் இணைய வேண்டும் என விருப்பம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் வட்டாரங்கள் கூறும்போது, “பாஜகவுடன் சில மாநிலங்களில் சுமார் 250 தொகுதிகளில் காங்கிரஸுக்கு நேரடிப் போட்டி உள்ளது. இங்கு இதர எதிர்க்கட்சிகள் போட்டியிடாமல் காங்கிரஸுக்கு ஆதரவளிக்கும். இதேவகையில், பிராந்திய கட்சிகள் ஆளும் மாநிலங்களில் காங்கிரஸ் போட்டியிடாமல் அக்கட்சிகளுக்கு ஆதரவளிக்க வேண்டும். மேலும் பிராந்திய கட்சிகளுக்கு நிலவும் நெருக்கடிக்காக மத்திய அரசை எதிர்க்க காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஒன்றிணைவதும் அவசியம். இதுபோன்ற நிபந்தனைகளை விதிக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம்” என்றன.
இதனிடையே, டெல்லி முதல்வர் கேஜ்ரிவால், இதர எதிர்க்கட்சி தலைவர்களையும் சந்திக்க உள்ளார். சரத்பவார், உத்தவ தாக்கரே, கே.சந்திரசேர ராவ் ஆகியோர் இப்பட்டியலில் முக்கிய இடம் பிடித்துள்ளனர்.