இம்பால்: மணிப்பூரில் புதிதாக ஏற்பட்ட வன்முறையில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். இருவர் காயமடைந்துள்ளனர்.
மணிப்பூரில் இம்மாத தொடக்கத்தில் இருவேறு சமூகத்தவர் இடையே ஏற்பட்ட மோதலை அடுத்து அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நிலைமை கண்காணிக்கப்பட்டு வந்தது. மேலும், பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகக் கருதப்பட்ட இடங்களில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
நிலைமை மேம்பட்டு வந்ததை அடுத்து, மணிப்பூரின் பல பகுதிகளில் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டது. குறிப்பாக பிஷ்னுபூர், இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு மாவட்டங்களில் காலை 5 மணி முதல் மாலை 4 மணி வரை ஊரடங்கு உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்டது.
இந்நிலையில், பிஷ்னுபூர் மாவட்டத்தின் மொய்ராங் பகுதியில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர், ஆயுதங்களுடன் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த தொய்ஜாம் சந்திரமணி என்ற இளைஞர், வெளியே வந்து வேடிக்கை பார்த்துள்ளார். பின்னால் இருந்து அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில், முதுகை துளைத்துக்கொண்டு குண்டு வெளியே வந்துள்ளது.
நிலைகுலைந்து கீழே விழுந்த அவரை அருகில் இருந்தவர்கள் தூக்கிக் கொண்டு மருத்துவமனை சென்றுள்ளனர். தொய்ஜாம் சந்திரமணியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர். இதையடுத்து நடத்தப்பட்ட பதில் தாக்குதலில் இருவர் காயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவங்களை அடுத்து ஊரடங்கு தளர்வு ரத்து செய்யப்பட்டு கண்காணிப்பு மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. முதல்வரும் உள்துறை அமைச்சருமான பைரன், 20க்கும் மேற்பட்ட கம்பெனி ராணுவப் படையை அனுப்பிவைக்குமாறு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.