மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடித்தது; பிஷ்னுபூர் மாவட்டத்தில் ஒருவர் பலி; 2 பேர் காயம்

மணிபூர்,

இம்பால், வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், பெரும்பான்மையாக வசிக்கும் மெய்தி இன மக்கள், தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து அளிக்கக்கோரி குரல் கொடுத்து வருகிறார்கள். அதற்கு அங்குள்ள நாகா, குகி என்ற பழங்குடியின மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

கடந்த 3-ந்தேதி, பழங்குடியின மக்கள் நடத்திய பேரணி, வன்முறையில் முடிந்தது. இருதரப்புக்கும் இடையே கலவரம் மூண்டது. 70 பேர் பலியானார்கள். கலவரத்தை ஒடுக்க ராணுவம், போலீசார் என 10 ஆயிரம்பேர் ஈடுபடுத்தப்பட்டனர்.

ஒரு வாரத்தில் அமைதி திரும்பிய நிலையில், நேற்று முன்தினம் மீண்டும் வன்முறை வெடித்தது. மணிப்பூர் கிழக்கு மாவட்டம் நியூ செகோன் பகுதியில் கடைகளை அடைக்குமாறு முன்னாள் எம்.எல்.ஏ. உள்பட 4 பேர் கொண்ட ஆயுதம் தாங்கிய கும்பல் அச்சுறுத்தல் விடுத்தது.

அதைத்தொடர்ந்து ஒரு கும்பல் 2 வீடுகளை தீயிட்டு கொளுத்தியது. அந்த வீட்டில் ஆட்கள் இல்லாததால், உயிர்ச்சேதம் இல்லை. இதைத்தொடர்ந்து, இம்பால் கிழக்கு மாவட்டம் புகாவோ, லெய்டான்போக்பி உள்ளிட்ட பகுதிகளில் உள்ளூர் மக்கள் தங்கள் வீடுகள் மீது தாக்குதல் நடத்தப்படுவதை தடுக்க உரிமம் பெற்ற துப்பாக்கிகளுடன் காவல் இருக்க தொடங்கினர். அவர்கள் பதுங்கு குழிகளையும் வெட்டி இருந்தனர். அத்தகைய 5 பதுங்கு குழிகளை பாதுகாப்பு படையினர் அழித்தனர்.

இந்தநிலையில், மணிப்பூரின் பல பகுதிகளில் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டது. குறிப்பாக பிஷ்னுபூர், இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு மாவட்டங்களில் காலை 5 மணி முதல் மாலை 4 மணி வரை ஊரடங்கு உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்டது.

பிஷ்னுபூர் மாவட்டத்தின் மொய்ராங் பகுதியில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர், ஆயுதங்களுடன் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த தொய்ஜாம் சந்திரமணி என்ற இளைஞர், வெளியே வந்து வேடிக்கை பார்த்துள்ளார். பின்னால் இருந்து அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில், முதுகை துளைத்துக்கொண்டு குண்டு வெளியே வந்துள்ளது.

நிலைகுலைந்து கீழே விழுந்த அவரை அருகில் இருந்தவர்கள் தூக்கிக் கொண்டு அருகில் உள்ள மருத்துவமனை சென்றுள்ளனர். தொய்ஜாம் சந்திரமணியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இதையடுத்து நடத்தப்பட்ட பதில் தாக்குதலில் 2 பேர் காயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவங்களை அடுத்து ஊரடங்கு தளர்வு ரத்து செய்யப்பட்டு கண்காணிப்பு மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. முதல்-மந்திரியும் உள்துறை மந்திரியுமான பைரன், 20க்கும் மேற்பட்ட கம்பெனி ராணுவப் படையை அனுப்பிவைக்குமாறு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

மணிப்பூரில் மே 4 முதல் வன்முறைச் சம்பவங்களை சந்தித்து வருகிறது. காலவரையற்ற ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, இணைய சேவை நிறுத்தபட்ட போதிலும், தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருவது குறிப்பிடத்தக்கது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.