சென்னை: மத்திய ரிசர்வ் வங்கி ரூ.2,000 நோட்டுகளை திரும்பப் பெறுவதாக, ‘கிளீன் நோட் பாலிசி’ என்ற திட்டத்தை கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தது. அதன்படி, ரூ.2,000 நோட்டுகளை வைத்திருப்பவர்கள் நேற்று முதல் (23-ம் தேதி) வரும் செப். 30-ம் தேதி வரை அனைத்து வங்கிகளிலும் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் அல்லது டெபாசிட் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது. ரூ.2,000 நோட்டுகளை பொதுமக்கள் மாற்றுவதற்கு வசதியாக அனைத்து வங்கிகளிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
குறிப்பாக, ரூ.2,000 நோட்டுகள் அதிகளவு வரும்பட்சத்தில் அவற்றை மாற்றி கொடுப்பதற்கு வசதியாக அனைத்து வங்கிகளிலும் தேவையான அளவுக்கு ரூ.200, ரூ.500 நோட்டுகள் இருப்பு வைக்கப்பட்டன. அத்துடன், ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தலின் பேரில், பெரும்பாலான வங்கிகளில் ரூ.2,000 நோட்டுகளை மாற்ற சில வங்கிகளில் தனி வரிசை அமைக்கப்பட்டு இருந்தது. அத்துடன், பொதுமக்கள் வங்கியில் அமர இருக்கை, குடிநீர் உள்ளிட்ட வசதிகளும் செய்யப்பட்டன.
முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளை காக்கவைக்காமல் இருப்பதற்காக அவர்களுக்கு முதலில் பணத்தை மாற்றி கொடுத்து அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால், முதல் நாளான நேற்று சென்னையில் ஒருசில வங்கிகளில் மட்டும் ரூ.2,000 நோட்டுகளை மாற்ற சற்று கூட்டம் காணப்பட்டது. பெரும்பாலான வங்கிகளில் குறைந்த அளவே கூட்டம் இருந்தது.
இதுகுறித்து, வங்கி அதிகாரிகள் கூறுகையில், கடந்த 2016-ம் ஆண்டுபண மதிப்பிழப்பு செய்யப்பட்டபோது வங்கிகளிலும், ஏடிஎம் மையங்களிலும் மக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு பணத்தை மாற்ற போட்டி போட்டனர். இதனால் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் கடும் அவதிக்குள்ளாக நேரிட்டது. அத்துடன், வங்கி ஊழியர்களுக்கும் வேலைப்பளு அதிகரித்தது. இந்நிலையில், ரூ.2,000 நோட்டுகளை திரும்பப் பெற வங்கிகளில் கூட்டம் அதிகளவில் கூடவில்லை.
ரூ.2,000 நோட்டுகளை மாற்றகணக்கு வைத்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. விண்ணப்பம் ஏதும் பூர்த்தி செய்து கொடுக்கவேண்டிய அவசியமும் இல்லை என்பதால், பொதுமக்கள் மிக எளிதாக ரூ.2,000 நோட்டுகளை மாற்றிசென்றனர். அதிகளவு ரூ.2,000 நோட்டுகளுடன் வந்தவர்களிடம் மட்டுமே அடையாள அட்டை கேட்கப்பட்டது. ஏடிஎம் மையங்கள் மூலமாகவும் ரூ.2,000 நோட்டுகளை பல இடங்களில் பொதுமக்கள் டெபாசிட் செய்தனர். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.