சேப்பாக்கத்தில் நேற்று நடந்த பிளேஆஃப் முதல் தகுதிச்சுற்று போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றிருக்கிறது. இந்தப் போட்டியை தன் குடும்பத்துடன் பார்க்க மைதானத்திற்கு வந்திருந்தார் முன்னாள் சிஎஸ்கே வீரர் ராபின் உத்தப்பா. மைதானத்தில் தன் மகனுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றையும் ட்விட்டரில் பதிவிட்டார்.
மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், புனே வாரியர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் எனச் சென்னை சூப்பர் கிங்ஸுக்காக ஆடுவதற்கு முன்பு பல ஐபிஎல் அணிகளில் ஆடியிருக்கிறார் உத்தப்பா. குறிப்பாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக 6 சீசன்கள் (2014-2019) ஆடியிருக்கிறார். இப்படி இருந்தும், “சென்னை அணிக்கு மட்டும் இப்படி ஆதரவளிப்பது ஏன், இப்படி நீங்கள் கொல்கத்தாவுக்கு ஆதரவளித்து நாங்கள் பார்த்ததே இல்லையே!” என ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்ப, “நண்பா, விஸ்வாசம், மரியாதை எல்லாம் கொடுத்தால்தான் திரும்பக் கிடைக்கும்!” எனப் பதிலளித்தார் உத்தப்பா. இதைக் கண்டு கொதித்தெழுந்த கொல்கத்தா ரசிகர்கள் அவரை ட்விட்டரில் வறுத்தெடுத்தனர்.
“என் அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டதுக்கு இப்படியான வெறுப்பு என் மேல் கொட்டப்படுவது ஒன்றும் எனக்கு ஆச்சர்யமாக இல்லை. அமைதியும், அன்பும் அனைவரிடத்திலும் பெருகட்டும்!” என அந்தப் பதிவுகளுக்குப் பதிலடி கொடுத்தார் உத்தப்பா.
“வெறுப்பை விட்டுத் தள்ளுங்கள். உங்கள் மீது பொழியப்படும் பேரன்பின் மீது கவனம் செலுத்துங்கள்” என இர்பான் பதான் அவருக்கு ஆதரவு கரம் நீட்ட, “இந்த உலகம் அன்பால் நிறைந்தது. வெறுப்பை வெல்லும் பேராயுதம் அன்புதான்!” என அவருக்குப் பதிலளித்துள்ளார் உத்தப்பா.