வெறித்தனமாக பெய்த மழை.. மூழ்கியது பெங்களூர் நகரம்.. முதல்வர் சித்தராமையா அவசர ஆலோசனை

பெங்களூர்:
கர்நாடகா தலைநகர் பெங்களூரில் கடந்த 4 நாட்களாக கொட்டி வரும் கனமழையால் அந்நகரின் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. பல இடங்களில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதனிடையே, இந்த மழை பாதிப்பில் இருந்து பெங்களூரை மீட்பது தொடர்பாக அவசர ஆலோசனைக் கூட்டத்தை கர்நாடகா முதல்வர் சித்தராமையா கூட்டினார்.

கர்நாடகாவின் பல மாவட்டங்களில் பருவமழைக் காலத்துக்கு முன்கூட்டியே மழை வெளுத்து வாங்கி வருகிறது. பெங்களூரில் கடந்த ஒரு மாதக்காலமாகவே விட்டுவிட்டு மழை பெய்து வந்த நிலையில், கடந்த 4 நாட்களாக பேய் மழை கொட்டி வருகிறது. விடாமல் பெய்த மழையால் பெங்களூரின் பல முக்கிய இடங்கள் நீரில் மூழ்கின. சாலைகள் எங்கும் மழை நீர் வெள்ளமாக ஓடுவதால் அங்கு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

இதேபோல, பல சுரங்கப் பாதைகளும் மழை நீரில் முழுவதுமாக மூழ்கியதால் அங்கு வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இரு தினங்களுக்கு முன்பு கூட கே.ஆர். சர்க்கிள் பகுதியில் உள்ள சுரங்கப்பாதையை நிரம்பியிருந்த மழை நீரில் மூழ்கி இளம்பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். தற்போது பெய்து வரும் மழையாலும் வீட்டுச் சுவர் இடிந்து விழுந்தது, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது போன்ற சம்பவங்களில் சிலர் உயிரிழந்திருப்பதாகவும், பலர் காயமடைந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெங்களூர் மட்டுமல்லாமல் பழைய மைசூர் பகுதிகளிலும் கனமழை கொட்டி வருகிறது. மழையுடன் சேர்ந்து சூறைக்காற்றும் வீசுவதால் நூற்றுக்கணக்கான மரங்கள் வேருடன் சரிந்துள்ளன. பல இடங்களில் மின் கம்பங்களும் சேதம் அடைந்ததால் பல பகுதிகளில் மின்தடை ஏற்பட்டுள்ளது. இதனால் பெங்களூர்வாசிகள் கடும் இன்னலை சந்தித்து வருகின்றனர். இன்றும் பெங்களூரில் சூறைக்காற்றுடன் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இந்த மழை பாதிப்பில் இருந்து பெங்களூர் மக்களை மீட்பதற்காக போர்க்கால நடவடிக்கைகளை தொடங்குமாறு நேற்று நடந்த அவசர ஆலோசனைக் கூட்டத்தில் அதிகாரிகளுக்கு முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டார். மேலும், மழை வெள்ளத்தில் இருந்து மக்களை மீட்பதற்கும், அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதற்கும் 60-க்கும் மேற்பட்ட கட்டுப்பாட்டு அறைகளை திறக்குமாறும் முதல்வர் சித்தராமையா அறிவுறுத்தினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.