சென்னை: மதிமுகவின் மூத்த தலைவர், திமுக பக்கம் வரப்போகிறாராம்.. இதுதான் இணையத்தில் தீயாய் பரவி கொண்டிருக்கிறது.. என்ன நடக்கிறது மதிமுகவில்?
வைகோவை பொறுத்தவரை கடின உழைப்பாளி.. மிகச்சிறந்த பேச்சாளர்.. தலைசிறந்த இலக்கியவாதி.. உலக வரலாற்றையே கரைத்து குடித்தவர்.. தனக்கு கிடைத்த பதவிகளையும், தன் கட்சிக்காரர்களுக்கே விட்டுத் தந்த குணாளன்..
தமிழருக்கு ஒரு பிரச்சனை என்றால் அங்கு முதல் ஆளாக வைகோதான் சீற்றத்துடன் நிற்பார்.. தமிழ் வளத்துக்கு ஒரு களங்கம் என்றால், அங்கேயும் வைகோதான் கெத்துடன் நிற்பார்.. இதற்காக அவர் செய்த போராட்டங்கள் ஏராளம்.. இவர்மீது தொடுக்கப்பட்ட வழக்குகள் ஏராளம்..
அஞ்சாத வைகோ: அவைகளில் சில வழக்குகளை வைகோவே நேரில் ஆஜராகி வாதாடவும் செய்வார்.. அதேசமயம், மக்களுக்காக சிறை செல்லவும் அஞ்சாதவர்..
தமிழக அரசு இந்த ஸ்டெர்லைட் ஆலையை மூட காரணமாக இருந்தே வைகோ எடுத்த போராட்டங்கள்தான்.. ஆனால், ஆலையிடம் பணம் வாங்கிகொண்டார் என்று இதே வைகோமீது புழுதிவாரி தூற்றிய கதையும் இந்த தமிழகத்தில் நடந்தது. வைகோ நினைத்திருந்தால், எவ்வளவோ பணத்தை சம்பாதித்திருக்க முடியும்.. எனினும், அப்படி ஒரு மலிவான செயலை செய்யாதவர் வைகோ என்பதை இங்கு நாம் அழுத்தமாக வலியுறுத்த வேண்டியிருக்கிறது.
அதேசமயம், சமீபகாலமாகவே மதிமுகவில் சிறுசிறு சலசலப்புகள் வந்தவண்ணம் உள்ளன.. எந்த காரணத்தை காட்டி, திமுகவில் இருந்து விலகினாரோ, அதே காரணத்திலேயே, தற்போது வைகோவும் சிக்கியுள்ளார்.. வாரிசு அரசியல் பிரச்சனை வெடித்து கிளம்பியதுமே, சலசலப்புகள் எழுந்தன.. அதிருப்தியாளர்கள் சிலர் வெளியேறினர்.. இதனால் கட்சிக்கு பெரிதாக எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பதே உண்மை.
அதிர்வுகள்: ஆனால், சில அதிர்வுகள் கட்சிக்குள் ஏற்படவே செய்தன.. “30 ஆண்டுகளாக எழுச்சிமிக்க வைகோவின் உரையை கேட்டு வளர்ந்த தோழர்கள், இப்போது ஏமாற்றம் அடைந்துள்ளனர்… இந்த நிலை மேலும் மோசமடையாமல் இருக்க தாய் கழகமான திமுகவுடன் மதிமுகவை இணைப்பதே சரி” என்று கோரிக்கைகள் கிளம்பின.. மூத்த தலைவர் திருப்பூர் துரைசாமி இதுதொடர்பாக வைகோவிற்கு 4 முறை கடிதமும் எழுதினார்… எனினும், இது சம்பந்தமாக, வைகோவே செய்தியாளர்களிடம் ஒரு விளக்கம் தந்திருந்தார்.
‘கட்சிக்குள் குழப்பம் நிலவுவதாக சிலர் தோற்றத்தை ஏற்படுத்த முயற்சித்தார்கள். ஆனால் அவர்களின் முயற்சி தோற்று போய்விட்டது. பொதுக்குழு கூட்டத்திற்குபிறகு முன்பை விட வேகமாக மதிமுக செயல்படும்.. நாங்கள் சிலவற்றை அலட்சியப்படுத்த விரும்புகிறோம். ஒதுக்குகிறோம். ஜனநாயக முறைப்படி கட்சிக்குள் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. இதற்கு மேல் திருப்பூர் துரைசாமிக்கு முக்கியத்துவம் கொடுத்து நான் பேச விரும்பவில்லை என்று வைகோ திட்டவட்டமாக கூறியிருந்தார்.
கணேசமூர்த்தியா?: இப்போது மீண்டும் ஒரு சலசலப்பு கிளம்பி உள்ளது.. மதிமுகவின் உட்கட்சி தேர்தல் நடந்து வருகிறது. நிர்வாகிகள் தேர்தல் ஜுன் 1ம் தேதி நடக்க போகிறது.. இப்போதைக்கு கட்சியின் பொருளாளராக பதவி வகித்து வருபவர் ஈரோடு எம்பி கணேஷமூர்த்தி.. நடக்க போகும் இந்த தேர்தலில் இவரது பொருளாளர் பதவி பறிக்கப்படக்கூடும் என்ற தகவல் வெளியானது.. அதுமட்டுமல்லாமல், மதிமுகவில் இருந்து விலகி திமுகவில், கணேஷ மூர்த்தி இணைய போவதாகவும் செய்திகள் பரபரத்தன..
முற்றுப்புள்ளி: இந்த திடீர் தகவல் மதிமுகவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.. ஏற்கனவே சில தலைவர்கள் கட்சியில் இருந்து வெளியேறியதால், கணேசமூர்த்தியும் திமுக பக்கம் செல்கிறாரா? என்ற சந்தேகங்களும் கிளம்பின..
ஆனால், கணேசமூர்த்தியே இதற்கு நேரடியாக பதிலளித்துள்ளார்.. எந்த காரணத்திற்காகவும் மதிமுகவிலிருந்து விலகப்போவதில்லை என்றும், எந்த மாற்று கட்சியிலும் இணையப்போவதில்லை, யார் எந்த செய்தி பரப்பினாலும் தனக்கு கவலை இல்லை என்று தெளிவுபடுத்தி உள்ளார்.. அத்துடன் பரவிவரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளியையும் அழுத்தமாக வைத்துள்ளார்.
“யாரோ தேவையில்லாமல், இப்படியெல்லாம் மதிமுக மீது வதந்திகளை கிளப்பி வருகிறார்கள், மதிமுக என்றுமே சீராகவும், சரியாகவும் பயணிக்கிறது ” என்று கனத்த நம்பிக்கையுடன் சொல்கிறார்கள் வைகோவின் தொண்டர்கள்.