புதுடெல்லி,
பிரதமர் நரேந்திர மோடி தனது 3 நாள் அரசுமுறை சுற்றுப்பயணத்தின் முடிவில் ஆஸ்திரேலியாவில் இருந்து இன்று டெல்லிக்கு விமானம் மூலம் புறப்பட்டுள்ளார். இந்த 3 நாள் பயணத்தின் முதல்கட்டமாக ஜப்பான் சென்ற அவர், ஹிரோஷிமாவில் நடைபெற்ற ஜி7 மாநாடு மற்றும் குவாட் கூட்டத்தில் கலந்து கொண்டு, மற்ற நாடுகளின் பிரதமர்களுடன் இருதரப்பு சந்திப்புகளை நடத்தினார்.
அதன்பின், பப்புவா நியூ கினியா பயணத்தின் போது, இந்தியா-பசிபிக் தீவுகள் ஒத்துழைப்பின் (எஃப்ஐபிஐசி) மூன்றாவது உச்சிமாநாட்டை பிரதமர் தொகுத்து வழங்கினார். உச்சிமாநாட்டின் போது பசிபிக் தீவு நாடுகளின் தலைவர்களைச் சந்தித்தார்.
இதனையடுத்து, மூன்றாவது நாள் பயணத்தில் ஆஸ்திரேலியா சென்றார். அங்கு சிட்னியில் நடைபெற்ற புலம்பெயர்ந்த இந்தியர்களுக்கான கலாச்சார விழாவில் பிரதமர் மோடி உரையாற்றினார். இந்நிலையில் பிரதமர் மோடியின் மூன்று நாடு சுற்றுப்பயணம் வெற்றிகரமாக முடிவடைகிறது என வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தெரிவித்துள்ளார்.
மேலும், நட்பு நாடுகளுடன் வலுவான தொடர்பை வளர்க்கும் வகையில் ஜப்பான், பப்புவா நியூ கினியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு மூன்று நாடுகளின் பயணத்தைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி டெல்லிக்கு புறப்பட்டார் என்று அரிந்தம் பாக்சி தெரிவித்துள்ளார்.