புதுடில்லி,ஒரு அட்டையில் உள்ள மாத்திரைகளை முழுதுமாக வாங்கும்படி மருந்து கடைக்காரர்கள் வலியுறுத்துவதாக, தொடர்ந்து எழும் புகார்களை அடுத்து, இதில் தீர்வு காண மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சகம் ஆலோசனை நடத்தியது.
மருந்து கடைகளுக்கு செல்லும் நுகர்வோரிடம், முழு அட்டையுடன் மாத்திரைகளை வாங்கும்படி, கடைக்காரர்கள் வலியுறுத்துவதாகவும், இதனால் நிதிச்சுமை ஏற்படுவதாகவும், மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சகத்திற்கு புகார்கள் வந்தன.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் நுகர்வோர் நலனை பாதுகாக்கும் வகையில், மருந்து மற்றும் மருத்துவ சாதனங்கள் துறையின் மூத்த பிரதிநிதிகளுடன், மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை புதுடில்லியில் நேற்று ஆலோசனை நடத்தியது.
இதில், டி.சி.ஜி.ஐ., எனப்படும் இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பின் உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர்.
‘வேகமாக விற்பனையாகும் மாத்திரைகளை அட்டையில் இருந்து ஒன்று அல்லது இரண்டாக பிரித்து விற்பனை செய்கிறோம். அதிகம் விற்பனையாகாத மாத்திரை அட்டைகளில் தான் பிரச்னைகள் இருக்கின்றன.
‘இவற்றை மருந்து நிறுவனங்கள் திரும்பப் பெற மறுக்கின்றன’ என மருந்து கடைகளின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
இக்கூட்டத்தில், ஒவ்வொரு மாத்திரையையும் சுலபமாக, தனியாக பிரித்து தரும் வகையில் ‘பேக்கிங்’ செய்ய வலியுறுத்தப்பட்டது.
மேலும், ஒவ்வொரு மாத்திரை அட்டைக்கு பின்புறமும், உற்பத்தி மற்றும் காலாவதி தேதியை அச்சிடவும், க்யூ.ஆர்., குறியீட்டைப் பயன்படுத்தவும் பரிந்துரை செய்யப்பட்டது.
அனைத்து தரப்பினரது கருத்துக்களையும் கேட்ட மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை விரைவில் தீர்வு காண இருப்பதாக தெரிவித்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement