கோல்கட்டா மேற்கு வங்கத்தில்,சட்ட விரோதமாக இயங்கிய பட்டாசு ஆலைகளில், சமீபத்தில் தீப்பற்றி பலர் உயிரிழந்ததை அடுத்து,நாடியா, வடக்கு மற்றும் தெற்கு 24 பர்கானஸ், மால்டா ஆகிய மாவட்டங்களில் சோதனை நடத்திய போலீசார், 34 ஆயிரம் கிலோ வெடி பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக, 100 பேரை கைது செய்தனர்.
மேற்கு வங்கமாநிலத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது.
இங்கு, புர்பா மேதினிபூர் மாவட்டத்தில் உள்ள ஏக்ரா என்ற கிராமத்தில், கடந்த 16ம் தேதி, சட்ட விரோதமாக இயங்கிய பட்டாசு ஆலை வெடித்து விபத்துக்கு உள்ளானதில், 12 பேர் உயிரிழந்தனர்.
அதிர்ச்சி
இதைத் தொடர்ந்து, தெற்கு 24 பர்கானஸ் மாவட்டத்தில் உள்ள பட்ஜ் பட்ஜ் என்ற இடத்தில், வீட்டுக்குள் செயல்பட்டு வந்த பட்டாசு ஆலை, நேற்று முன்தினம் வெடித்தது. இதில், 17 வயது சிறுமி உட்பட 3 பேர் பலியாகினர்.
இதற்கிடையே நேற்று, மால்டா மாவட்டத்தில் செயல்பட்டு வந்த கார்பைடு கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.
கடந்த எட்டு நாட்களில், மாநிலத்தில் நடந்த வெடி விபத்துகளில், மொத்தம் 17 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், மாநிலத்தில் சட்ட விரோதமாக பல பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருவதும், இவற்றுக்காக ஏராளமான வெடி பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதும், இந்த விபத்துகளுக்கு காரணம் என தெரிய வந்தது.
இதையடுத்து, நாடியா,வடக்குமற்றும்தெற்கு24 பர்கானஸ் மாவட்டங்களில் உள்ள பல்வேறு இடங்களில், சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த பட்டாசு ஆலைகளில், கடந்த இரு நாட்களாக போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர்.
ஆலோசனை
இது குறித்து, போலீசார் கூறியதாவது:
நாடியா, தெற்கு மற்றும் வடக்கு 24 பர்கானஸ் மாவட்டங்களில் நடந்த சோதனையில், 34 ஆயிரம் கிலோ வெடி பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இவற்றை சேமித்து வைத்து, சட்ட விரோதமாக பட்டாசு ஆலைகளை நடத்தி வந்த 100 பேரை கைது செய்துஉள்ளோம்.
இது தொடர்பாக, 132 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது போன்ற சோதனைகள், மற்ற மாவட்டங்களிலும் தொடரும்.
தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில், ஹரால் என்ற இடத்தில் செயல்பட்டு வரும் பட்டாசு சந்தையை மூட மாநில அரசு முடிவு செய்துள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அங்குள்ள அனைத்து வணிகர்களும் தங்களிடம் உள்ள அனைத்து மூலப்பொருட்களையும் உள்ளூர் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
இவ்வாறு அவர்கள்கூறினர்.
இதற்கிடையே, கோல்கட்டாவில் உள்ள தலைமைச் செயலகத்தில், பட்டாசு வியாபாரிகளுடன், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விரைவில் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்