புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் கூட்டுறவு துறையின் கீழ் உள்ள 45 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் கணினி மயமாக்கப்படுகிறது.
நாடு முழுதும் 90 ஆயிரம் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் இயங்கி வருகிறது. இவற்றில் விவசாயிகளுக்கு கடன் உதவி, டெபாசிட் உள்ளிட்ட சில பணிகள் மட்டுமே நடக்கிறது.
சங்கங்களில் காகித ஆவணங்களில் பதிவு செய்யும் முறையால் கால தாமதமும், ஆண்டு தணிக்கையின்போது பல குளறுபடிகள் ஏற்படுகிறது. இவற்றை தவிர்க்கவும், விரைவான வசதி கிடைக்க மத்திய கூட்டுறவு அமைச்சகம், தேசிய வேளாண் வளர்ச்சி மற்றும் கிராம மேம்பாட்டு வங்கி (நபார்டு) மூலம், நாட்டில் உள்ள 90 ஆயிரம் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களை கணினி மயமாக்க நடவடிக்கை எடுத்து வருகின்றது.
அதில், முதல்கட்டமாக 60 ஆயிரம் சங்கங்களை தேர்வு செய்து கணினி மயமாக்கும் பணி நடக்கிறது. இதற்காக மத்திய அரசு ரூ.2,516 கோடி நிதி ஒதுக்கி உள்ளது. அதில், புதுச்சேரி மாநிலத்தில் இயங்கி வரும் 56 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில், 45 சங்கங்களை தேர்வு செய்து அதனை கணினி மயமாக்கும் பணி துவங்கி உள்ளது.
ஒவ்வொரு தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்திற்கும், கம்ப்யூட்டர் பொருத்துவதிற்கு மட்டும் தலா ரூ. 1.20 லட்சம் வழங்கப்படுகிறது. கம்யூட்டரில் ஒருங்கிணைந்த சாப்ட்வேர் பொறுத்தும் பணியை நபார்டு வங்கி மேற்கொள்கிறது. இதன் மூலம் தினசரி வரவு செலவுகள், மாநில கூட்டுறவு துறையும், தேசிய அளவில் நபார்டு வங்கியும் நேரடியாக கண்காணிக்கும்.
புதுச்சேரி மாநில தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கு கணினி மயமாக்குதல் குறித்த பயிற்சி நேற்று துவங்கியது. முதற்கட்டமாக 22 சங்க நிர்வாகிகளுக்கு, சுய்ப்ரேன் வீதியில் உள்ள மாநில கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பயிற்சி நடந்தது. இன்று 23ம் தேதி மீத முள்ள 23 சங்கங்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இப்பயிற்சியில், கணினி மயமாக்கம் செய்வதின் முக்கியத்துவம், மாற்றம் மேலாண்மை, கணினி பயன்பாடுகள், மென்பொருள் நிறுவுதல் மற்றும் சங்கம் குறித்த முதல் அறிக்கை தயார் செய்வது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. கூட்டுறவு மேலாண் நிலைய முதுநிலை கம்ப்யூட்டர் விரிவுரையாளர்கள் ரங்கநாதன், ரமேஷ்குமார் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.
சங்க பதிவாளர் யஷ்வந்தையா பயிற்சி வகுப்பை துவக்கி வைத்தார். கூட்டுறவு ஒன்றிய நிர்வாகி சாரங்கபாணி, மேலாண் இயக்கு நர் ராமச்சந்திரய்யா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சங்கங்களுக்கு கூடுதல் பணி
கணினி மயமாக்கப்பட்ட பின், சங்கங்களின் தினசரி பணி விரிவுப்படுத்தப்பட உள்ளது உணவு பொருள் குடோன், எரிவாயு சிலிண்டர் சப்ளை, பெட்ரோல், டீசல் வினியோகம், பொதுசேவை மையம், உரம், விதை வினியோகம், சமுதாய நீர்பாசனம் உள்ளிட்ட 25 வகையான பணிகள் சங்கங்கள் மூலம் மேற்கொள்ளப்பட உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்