Govt has invited all parties, they are allowed to act as per their wisdom: Amit Shah on new Parliament building inauguration | புதிய பார்லி., திறப்பு விழாவில் தமிழக செங்கோல்!: அமித்ஷா தகவல்

புதுடில்லி: பிரதமர் மோடியின் 9 ஆண்டுக்கால சாதனைக்கு எடுத்துக்காட்டு புதிய பார்லிமென்ட் கட்டடம். எனவே கட்டட திறப்பு விழாவை எதிர்க்கட்சிகள் அரசியல் ஆக்க கூடாது. புதிய பார்லி., கட்டடத்தில் சோழர் காலத்தில் பயன்படுத்தியது போன்ற தமிழகத்தின் திருவாவடுதுறை ஆதினத்திடம் இருந்து 1947ல் பெறப்பட்ட செங்கோலை பிரதமர் மோடி வைக்க உள்ளார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.

இது குறித்து அமித்ஷா கூறியிருப்பதாவது:

புதிதாக கட்டப்பட்டுள்ள பார்லிமென்ட் கட்டடத்தை பிரதமர் மோடி மே 28ம் தேதி நாட்டிற்காக அர்பணிக்கிறார். பார்லிமென்ட் திறப்பு விழாவை அரசியலாக்க விரும்பவில்லை. மக்களே முடிவு செய்துகொள்ளட்டும். பிரதமர் மோடியின் 9 ஆண்டுக்கால சாதனைக்கு எடுத்துக்காட்டு புதிய பார்லிமென்ட் கட்டடம். புதிய பார்லிமென்ட் கட்டட திறப்பு விழாவை எதிர்க்கட்சிகள் அரசியல் ஆக்க கூடாது.

பார்லிமென்ட் கட்டட திறப்பு விழாவின் போது தமிழக செங்கோல் பிரதமர் மோடியிடம் வழங்கப்படும். இதற்காக தமிழகத்தில் இருந்து ஆதின குழு டில்லிக்கு பயணம் செய்து செங்கோலை பிரதமரிடம் ஒப்படைக்கும். இந்தியாவின் முதல் பிரதமர் நேருவிடம் ஒப்படைக்கப்பட்ட செங்கோலை பார்லிமன்றத்தில் பிரதமர் மோடி வைக்கிறார். 1947ம் ஆண்டு ஆங்கிலேயர்கள் நாட்டை விட்டு வெளியேறிய போது நேருவிடம் செங்கோல் ஒப்படைக்கப்பட்டது.

latest tamil news

புதிய பார்லிமென்ட் கட்டடம் கட்டும் பணியில் ஈடுபட்ட, 60 ஆயிரம் தொழிலாளர்களையும் திறப்ப விழாவின் போது பிரதமர் மோடி கவுரவிப்பார். கட்டடம் திட்டமிட்டப்பட்ட படி, சரியான நேரத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. நமது கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் நாகரிகத்தை நவீனத்துவத்துடன் இணைக்கும் அழகான முயற்சிதான். புதிய பார்லிமென்ட் கட்டடம். இவ்வாறு அவர் கூறினார்.

பிரதமர் மோடிக்கு நன்றி!

இது குறித்து தமிழக பாஜ., தலைவர் அண்ணாமலை கூறியிருப்பதாவது:

நமது நாடு சுதந்திரமடைந்த போது, ஆங்கிலேயர்களிடமிருந்து ஆட்சி மாற்றத்தைக் குறிக்கும் வகையில், “வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்” என்ற தேவார திருப்பதிகத்தைப் பாடி, தமிழகத்தைச் சேர்ந்த திருவாவடுதுறை ஆதீனம், பண்டித நேரு அவர்களிடம் சோழ மன்னர்கள் பயன்படுத்தியதைப் போன்ற செங்கோலை வழங்கினார். தமிழ் மன்னர்கள் ஆட்சியின் முக்கிய அங்கமாக விளங்கிய செங்கோலின் முக்கியத்துவம் குறித்து உள்துறை அமைச்சர் விரிவாக எடுத்துரைத்தார்.

latest tamil news

ஆனால், அதற்குப் பிறகு, அதன் முக்கியத்துவத்தை இழந்துவிட்ட செங்கோல், தற்போது நமது பிரதமர் அவர்களின், நமது பாரத கலாச்சாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியால், மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது.

புதிய பார்லிமென்ட் கட்டடத் திறப்பு விழாவின் போது, நமது பிரதமருக்கு சோழர் காலத்துச் செங்கோல் வழங்கப்படவிருக்கிறது. புதிய பார்லிமென்ட் கட்டிடத்தை அலங்கரிக்கும் வகையில் இந்த செங்கோல் இடம்பெறும்.

தமிழ்க் கலாச்சாரத்தைத் தேசிய அரங்கில் மீட்டெடுத்ததற்காக, பிரதமர் மோடி தமிழக மக்கள் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.