சென்னை: ஏ.ஆர். ரஹ்மானுக்கு அடுத்து தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்த ஹாரிஸ் ஜெயராஜ் பல சூப்பர் ஹிட் காதல் பாடல்களை கொடுத்து ரசிகர்களை கவர்ந்து வந்தார்.
காப்பி கேட் சர்ச்சைகளில் சிக்கிய அவர் அதன் பின்னர் சினிமா வாய்ப்புகளை அதிகளவில் இழந்தார். சில ஆண்டுகள் ஆளே அடையாளம் காணாமல் மறைந்து விட்டார்.
கடைசியாக லெஜண்ட் சரவணன் நடிப்பில் வெளியான தி லெஜண்ட் படத்திற்கு இசையமைத்த ஹாரிஸ் ஜெயராஜ் லவ் டுடே மற்றும் அடுத்து விஜய் நடிக்க உள்ள தளபதி 68 படங்களின் வாய்ப்புகளை அதிக சம்பளம் கேட்டதால் இழந்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்: கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான மின்னலே படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஹாரிஸ் ஜெயராஜ். தொடர்ந்து கவுதம் மேனன் உடன் பல சூப்பர் ஹிட் படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
மேலும், டாப் ஹீரோக்களின் படங்களுக்கும் இசையமைத்த ஹாரிஸ் ஜெயராஜ் ஏ.ஆர். ரஹ்மானையே ஒரு காலக்கட்டத்தில் தமிழ் சினிமாவில் மிஞ்சி டாப் இசையமைப்பாளராக வலம் வந்தது குறிப்பிடத்தக்கது.
மார்க்கெட் காலி: கிறிஸ்துவ பாடல்களை தமிழ் பாடல்களாக மாற்றி வருகிறார் என்றும் ஆங்கில பாடல்களை காப்பியடித்து தமிழ் படங்களுக்கு இசையமைத்து கொடுக்கிறார் என்றும் ஏகப்பட்ட சர்ச்சைகள் கிளம்பின.
அதன் பின்னர், அவர் இசையில் வெளியான ஒரு சில பெரிய படங்கள் படு தோல்வியை சந்தித்த நிலையில், ஹாரிஸ் ஜெயராஜின் மார்க்கெட் கோலிவுட்டில் டோட்டலாக காலியானது.
ஏ.ஆர். ரஹ்மான், அனிருத் ஆதிக்கம்: தமிழ் சினிமாவில் தற்போது 6 மாதங்கள் அனிருத் படங்கள் என்றால் 6 மாதங்கள் ஏ.ஆர். ரஹ்மான் படங்கள் தான் கோலோச்சி வருகின்றன. அவ்வப்போது யுவன் சங்கர் ராஜா, ஜி.வி. பிரகாஷ், சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட சில இசையமைப்பாளர்கள் நல்ல நல்ல ஆல்பங்களை கொடுத்து வருகின்றனர்.
தி லெஜண்ட் படத்தின் மூலம் ஹாரிஸ் ஜெயராஜ் கம்பேக் கொடுப்பார் என்று ரசிகர்களே எதிர்பார்க்காத நிலையில், அந்த படத்தின் பாடல்களும் படத்தை போலவே காணாமல் போய் விட்டது.
லவ் டுடே வாய்ப்பை தவறவிட்டார்: ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் பிரதீப் ரங்கநாதன் நடித்து இயக்கிய லவ் டுடே படத்திற்கு இசையமைக்க முதலில் யுவன் சங்கர் ராஜாவுக்கு பதில் ஹாரிஸ் ஜெயராஜை தான் அணுகினர் என்றும் ஆனால், 7 கோடி ரூபாய் சம்பளம் கொடுத்தால் தான் இசையமைப்பேன் என ஹாரிஸ் ஜெயராஜ் சொன்னதால் தான் அந்த சூப்பர் ஹிட் படத்தை மிஸ் செய்து விட்டார் என சினிமா வட்டாரத்தில் தற்போது பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
பிரதீப் ரங்கநாதன், இவானா நடிப்பில் வெளியான லவ் டுடே படத்தின் பட்ஜெட்டே 4.5 கோடி தான் என்பதால் ஏஜிஎஸ் நிறுவனம் 7 கோடி கேட்ட ஹாரிஸ் ஜெயராஜை விட்டு விட்டு எவ்வளவு கொடுத்தாலும் ஓகே என சொன்ன யுவன் சங்கர் ராஜாவை புக் செய்தனர் எனக் கூறுகின்றனர்.
தளபதி 68 பட வாய்ப்பும் போச்சு: லவ் டுடே படத்திற்கு அதிக சம்பளத்தை ஹாரிஸ் ஜெயராஜ் கேட்டதால் தயாரிப்பு தரப்பு அப்செட் ஆகி யுவன் சங்கர் ராஜாவை போட்ட நிலையில், தற்போது விஜய்யின் தளபதி 68 படத்திற்கும் அவருக்கே வாய்ப்பு கொடுத்து பெரிய சம்பளத்தையும் கொடுத்திருப்பதாகவும், ஹாரிஸ் ஜெயராஜை இந்த முறை நடிகர் தரப்பில் இருந்து பரிந்துரை செய்த போது கூட தயாரிப்பு தரப்பு வேண்டாம் எனக் கூறி விட்டனர் என ஷாக்கிங் தகவல்களை கூறுகின்றனர்.