சென்னை: சமீப காலமாக பல படங்கள் கதை திருட்டு சர்ச்சையில் சிக்கி வருகின்றன. சசிகுமார் நடித்த அயோத்தி, விஜய்சேதுபதி நடித்த யாதும் ஊரே யாவரும் கேளிர் உள்ளிட்ட படங்கள் அந்த பிரச்சனையை சந்தித்துள்ளன.
இந்நிலையில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் லால் சலாம் படத்தின் கதை தன்னுடைய கதை என இயக்குநர் பாலுமகேந்திராவின் உதவி இயக்குநரான மோகன் என்பவர் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.
லைகா நிறுவனத்துக்கு கடந்த ஆண்டு அனுப்பிய கதை தான் லால் சலாம் படமாக உருவாகி வருகிறதா? என்கிற சந்தேகத்தை அவர் எழுப்பி இருப்பது கோலிவுட்டில் பரபரப்பை கிளப்பி உள்ளது.
ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் லால் சலாம்: தனுஷை வைத்து 3, கவுதம் கார்த்திக்கை வைத்து வை ராஜா வை உள்ளிட்ட படங்களை இயக்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அதன் பின்னர் படங்களை இயக்குவதை முற்றிலுமாக விட்டு விட்டு குழந்தைகளை வளர்ப்பதில் கவனம் செலுத்தி வந்தார்.
சமீபத்தில் தனுஷை பிரிந்த நிலையில், மீண்டும் படம் இயக்க ஆரம்பித்துள்ள ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஒரு ஆல்பம் பாடலை இயக்கிய நிலையில், தற்போது விஷ்ணு விஷால், விக்ராந்த் மற்றும் கேமியோ ரோலில் ரஜினிகாந்த், கபில் தேவ் நடித்து வரும் லால் சலாம் படத்தை இயக்கி வருகிறார்.
கதை திருட்டு சர்ச்சையில் லால் சலாம்: தொடர்ந்து பல படங்கள் கதை திருட்டு சர்ச்சையில் சிக்கி வரும் நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் மொய்தீன் பாயாக நடித்து வரும் லால் சலாம் திரைப்படமும் கதை திருட்டு சர்ச்சையில் சிக்கி இருப்பதாக கோலிவுட்டில் பரபரப்பு பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.
இயக்குநர் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராக பணியாற்றி வந்த மோகன் என்பவர் கடந்த ஆண்டு லைகா நிறுவனத்துக்கு அனுப்பிய கதையைத்தான் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது லால் சலாம் படமாக இயக்கி வருகிறாரா என்கிற கேள்வி எழுந்துள்ளது.
இது கிரிக்கெட்.. அது ஃபுட்பால்: இரு நண்பர்கள் ஃபுட் பால் விளையாட்டில் எதிர்கொள்ளும் பிரச்சனை தான் அந்த மோகன் என்கிற நபர் லைகா நிறுவனத்திடம் கொடுத்த கதை என்கின்றனர்.
அந்த கதையை அப்படியே மாற்றி கிரிக்கெட் விளையாட்டை வைத்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி வருகிறாரா? என்கிற சந்தேகத்தை மோகன் கிளப்பி உள்ளார்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தரப்பு விளக்கம்: மோகனின் கதையை படித்துப் பார்த்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தரப்பு இந்த கதைக்கும் அந்த கதைக்கும் சம்பந்தமே இல்லை என்றும் இது வேறு கதை அது வேறு கதை என சொல்லி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
எப்படி இருந்தாலும், படத்தின் டீசர் காட்சிகள் மற்றும் டிரைலர் காட்சிகள் வெளியாகும் போது உண்மை என்ன? என்பது குறித்து தெரிந்து விடும் என்கின்றனர்.