Like T20 cricket, India-Australia relationship has gone to the next level: PM Modi | ‛டி20 கிரிக்கெட் போல அடுத்த கட்டத்திற்கு சென்ற இந்தியா – ஆஸி., உறவு: பிரதமர் மோடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சிட்னி: இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான உறவு என்பது ‛டி20′ கிரிக்கெட் போட்டி போல் அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளதாக சிட்னியில் பிரதமர் மோடி கூறினார்.

ஆஸ்திரேலியா சென்றுள்ள பிரதமர் மோடி, சிட்னியில் நேற்று (மே 23) நடைபெற்ற கலாசார விழாவில் அந்நாட்டு பிரதமர் அந்தோணி அல்பனீஸ் உடன் பங்கேற்றார். அங்கு கூடியிருந்த நூற்றுக்கணக்கான இந்திய வம்சாவளியினரை மத்தியில் இருவரும் உரையாற்றினர். இன்று சிட்னியில் உள்ள அட்மிரால்டி ஹவுஸ் சென்று பார்வையிட்டார். பின்னர் இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடனான கூட்டத்தில் கலந்துகொண்டார். முடிவில், இரு நாட்டுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

latest tamil news

பின்னர் பிரதமர் மோடி செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த ஓராண்டில் இது 6வது சந்திப்பு. இது நமது விரிவான உறவுகளின் ஆழத்தை பிரதிபலிக்கிறது. ஆஸ்திரேலியா உடனான எங்கள் (இந்தியா) உறவை கிரிக்கெட்டின் மொழியில் கூற வேண்டும் என்றால், எங்கள் உறவு ‛டி20′ கிரிக்கெட் போட்டி போல் அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளது.

ஆஸ்திரேலியாவில் கோவில்கள் மீதான தாக்குதல் மற்றும் பிரிவினைவாத சக்திகளுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து நானும், அந்தோணி அல்பனீஸூம் விவாதித்துள்ளோம். இன்றும் இவ்விஷயம் தொடர்பாக கலந்துரையாடினோம். இரு நாட்டு உறவுக்கு தீங்கு விளைவிக்கும் எந்த செயல்களையும் நாங்கள் ஏற்க மாட்டோம். எதிர்காலத்திலும் இதுபோன்ற கூறுகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுப்பேன் என்று அல்பனீஸ் என்னிடம் உறுதியளித்தார். இவ்வாறு அவர் கூறினார்.

பெங்களூருவில் துணை தூதரகம்

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸ் கூறுகையில், ‛பெங்களூருவில் ஆஸ்திரேலியா நாட்டிற்கான துணை தூதரகம் அமைக்கப்படும். இது ஆஸி., வணிகங்களை இந்தியாவின் வளர்ந்து வரும் டிஜிட்டல் உள்ளிட்டவற்றுடன் இணைக்க உதவும்’ என்றார்.

கிரிக்கெட் பார்க்க அழைப்பு

இந்தியாவில் வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை காண ஆஸ்திரேலிய பிரதமருக்கு, மோடி அழைப்பு விடுத்துள்ளார். பிரதமர் மோடி கூறுகையில், ‛ஆஸ்திரேலிய பிரதமரும், ஆஸி., கிரிக்கெட் ரசிகர்களும் கிரிக்கெட் போட்டிகளை காண இந்தியாவிற்கு வரவேண்டும். கிரிக்கெட்டுடன் தீபாவளி கொண்டாட்டங்களையும் கண்டு மகிழலாம்’ என்றார்.

latest tamil news

முதல் பக்கத்தில் பிரதமர் மோடி

ஆஸ்திரேலியாவின் முன்னணி செய்தித்தாள்களின் முதல் பக்கத்தில் பிரதமர் மோடி பற்றிய செய்திகளுடன் வெளியாகியுள்ளது. பிற நாட்டு தலைவர் பற்றிய செய்தியை அந்நாட்டு பத்திரிகைகளில் முதன்மை பக்கத்தில் பிரசுரிக்கப்படுவது சிறப்பு வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.