புதுடில்லி தி.மு.க., முன்னாள் தலைவரும், மறைந்த முன்னாள் தமிழக முதல்வருமான கருணாநிதி நினைவாக, சென்னை மெரினா கடற்கரையில் கடலுக்குள், 80 கோடி ரூபாய் செலவில், 134 அடி உயர பேனா சிலை அமைக்க தமிழக அரசுதிட்டமிட்டுள்ளது.
இந்த திட்டத்துக்கு, தமிழக எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர், உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்.
இதன் விபரம்:
கடற்கரையோரங்களில் கட்டுப்பாடற்ற கட்டுமான பணிகள் மற்றும் உப்பங்கழியின் இயற்கை பாதையில் தடை ஏற்படுத்தும் அத்துமீறல்கள் காரணமாக தான், மழைகாலங்களில் தமிழகத்தில் வெள்ளப் பெருக்கு பாதிப்புகள் ஏற்பட்டதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துஉள்ளனர்.
இந்நிலையில், சென்னை மெரினா கடற்கரையில், கடலுக்கு உள்ளே பேனா சிலை அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. சுற்றுச்சூழல் விதிகளை மீறும் இந்த திட்டத்துக்கு, தமிழக அரசின் அனைத்து துறைகளும் அவசரமாக அனுமதி அளித்துள்ளன.
இந்த பேனா சிலை அமைப்பதற்காக கடற்கரை ஓரம் கட்டுப்பாடற்ற கட்டுமான பணிகள் நடந்தால், இயற்கையான நீர் ஓட்டத்தில் பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தும்.
இறுதியில் கடுமையான இயற்கை பேரழிவுகளுக்கு வழிவகுக்கும். மெரினா கடலில் உள்ள மீன்வளத்தையும் பாதிக்கும்.
எனவே, இந்த பேனா சிலை அமைக்க தடை விதித்து, தமிழக அரசுமற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கோரப்பட்டுள்ளது.
ஒத்திவைப்பு
இதற்கிடையே, திருச்செந்துாரை சேர்ந்த ராம்குமார் ஆதித்யன் என்பவர், மெரினா கடலில் பேனா சிலை அமைப்பதை எதிர்த்து, பசுமை தீர்ப்பாயத்தில் 2022 டிச., மாதம் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீது, மத்திய, மாநில அரசு துறைகள் பதிலளிக்க தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
இந்நிலையில், கடலில் பேனா நினைவு சின்னம் அமைக்க, ஏப்ரல் 17ல் மத்திய அரசின் சுற்றுச்சூழல் மதிப்பீட்டு நிபுணர் குழு 15 நிபந்தனைகளுடன் அனுமதி அளித்தது. இதை எதிர்த்து மீனவர் அமைப்பு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
மேலும், ‘பேனா நினைவு சின்னத்திற்கு தடை விதிக்க வேண்டும்’ என, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், உச்ச நீதிமன்றத்தில் மே 15ல் இடையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த சூழலில், தென் மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் தொடரப்பட்ட வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதை, தமிழக அரசு வழக்கறிஞர் சுட்டிக் காட்டினார்.
இதைத் தொடர்ந்து, வழக்கை, ஜூலை 25க்கு தள்ளிவைத்து, தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர் குழு உறுப்பினர் சத்ய கோபால் ஆகியோர் உத்தரவிட்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்