மாஸ்கோ, எப்.ஏ.டி.எப்., எனப்படும் நிதி நடவடிக்கை பணிக் குழு அமைப்பால் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டால், பெரும் பொருளாதார பாதிப்புகளை ரஷ்யா சந்திக்க நேரிடும். இந்த விவகாரத்தில் உதவும்படி, இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளின் உதவிகளை ரஷ்யா மறைமுகமாக கேட்டு வருகிறது.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, கடந்தாண்டு பிப்ரவரியில் ரஷ்யா போர் தொடுத்தது. 15 மாதங்களைத் தாண்டியும் இந்தப் போர் ஓயவில்லை.
இந்நிலையில், சர்வதேச அளவில் பயங்கரவாதம் உள்ளிட்டவற்றுக்கு நிதி கிடைப்பதை கண்காணிக்கும் எப்.ஏ.டி.எப்., அமைப்பு, அதன் பட்டியலில் இருந்து ரஷ்யாவை கடந்தாண்டு நீக்கியது.
இந்த அமைப்பின் அடுத்த கூட்டம், ஜூனில் நடக்க உள்ளது. இதில், இந்த அமைப்பின் கறுப்புப் பட்டியலில் ரஷ்யாவை சேர்ப்பதற்கான முயற்சி நடந்து வருகிறது.
குறைந்தபட்சம், மிகவும் ஆபத்தானது என்பதை குறிப்பிடும், ‘கிரே’ நிற பட்டியலில் ரஷ்யாவை சேர்க்க திட்டமிடப்பட்டு உள்ளது. கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டால், உலக நாடுகளுடன் ரஷ்யாவால் எந்த பொருளாதார பரிவர்த்தனையும் செய்ய முடியாது.
இது ரஷ்யாவுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். கிரே பட்டியலில் சேர்க்கப்பட்டாலும், அது பெரும் பின்னடைவாக அமைந்துவிடும்.
தற்போது, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆகியவை ரஷ்யாவுக்கு எதிராக உள்ளன.
அதே நேரத்தில், இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள், உக்ரைன் மீதான போர் விவகாரத்தில் நடுநிலையுடன் உள்ளன. இதைத் தவிர, ரஷ்யாவுடன் தொடர்ந்து வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.
எப்.ஏ.டி.எப்., கூட்டத்தில், தன்னை கறுப்புப் பட்டியலில் சேர்க்க முயற்சி நடக்கும்போது, அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும்படி, இந்தியா, சீனாவுக்கு ரஷ்யா வலியுறுத்தி வருகிறது.
ரஷ்யாவுடன் பல துறைகளில் இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. மேலும், ஆயுதத் தளவாடங்கள் ரஷ்யாவிடம் இருந்தே அதிகளவில் வாங்கப்படுகின்றன. கறுப்புப் பட்டியில் சேர்க்கப்பட்டால், இந்த வர்த்தக உறவு பாதிக்கப்படும் என, இந்தியாவுக்கு ரஷ்யா கூறி வருகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்