பாலிவுட்டில் பிரபல நடிகை கங்கனா ரணாவத். தற்போது இந்திரா காந்தியின் பயோபிக்கான ‘Emergency’ மற்றும் ‘சந்திரமுகி-2’ திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று (செவ்வாய் கிழமை) உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் உள்ள கோயிலுக்கு நடிகை கங்கனா ரணாவத் சென்றிருந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கங்கனா, அண்மையில் நாடுமுழுவதும் சர்ச்சையைக் கிளப்பிய ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தைத் தடை செய்தது என்று கூறியுள்ளார்.
இதுபற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ள கங்கனா, “மத்திய திரைப்படத் தணிக்கை வாரியத்தால் (CBFC) சான்றளிக்கப்பட்ட ஒரு திரைப்படத்தைத் தடை செய்வது அரசியலமைப்பை அவமதிக்கும் செயலாகும். எந்தவொரு திரைப்படத்திற்கும் மத்திய அரசின் சென்சார் போர்டு ஒப்புதல் அளித்தால் அதை எதிர்க்கக்கூடாது. ‘தி கேரளா ஸ்டோரி’ படத்துக்கு சில மாநிலங்கள் தடை விதித்திருந்தது சரியல்ல. ‘தி கேரளா ஸ்டோரி’ போன்ற படங்கள் உருவாகும்போதுதான் மக்களின் பிரச்னைகள் வெளியே தெரியவந்து, அவை நிவர்த்தி செய்யப்படும் சூழல் உருவாகும்.
இதுபோன்ற படங்கள் திரைத்துறைக்கு உதவுகின்றன. மக்கள் பார்த்து ரசிக்கும் படங்களால் திரைத்துறையினருக்கு நன்மை மட்டுமே. இதுபோன்ற படங்கள் அதிகம் எடுக்கப்படுவதில்லை என்று பாலிவுட் மீது மக்களுக்கு எப்போதும் புகார்கள் உண்டு. எனவே இதுபோன்ற படங்கள் உருவாகும்போது, அவை வெகுஜன பார்வையாளர்களால் பாராட்டப்படுகின்றன” என்று கூறியுள்ளார்.
கடந்த மாதம் இப்படத்தின் டீசர் வெளியானது முதல் இப்படம் மத வெறுப்பு மற்றும் பொய்யான பரப்புரைகளால் எடுக்கப்பட்டுள்ளது எனப் பலரும் விமர்சித்திருந்தனர். இதன் காரணமாக தமிழ்நாட்டில் இப்படம் ஓரிரு நாட்கள் மட்டும் சொற்பமான திரையரங்களில் மட்டும் திரையிடப்பட்டு பின்னர் நிறுத்தப்பட்டது. ஆனால், மேற்கு வங்க அரசு, “இப்படம் அடிப்படையாகவே உண்மைக்குப் புறம்பாக எடுக்கப்பட்டுள்ளது. மேலும், சமூகத்தில் வெறுப்புணர்வைத் தூண்டும் வகையிலும், மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையிலும் எடுக்கப்பட்டுள்ளது. எனவே, இப்படம் திரையிடப்பட்டால் சமூக நல்லிணக்கத்திற்கு ஆபத்து ஏற்படும்” என வெளிப்படையாக அறிவித்து இப்படத்தை தடை செய்திருந்தது. இது நாடுமுழுவதும் பெரும் பேசுபொருளாகியிருந்தது. இதுகுறித்து பலரும் பல்வேறு கருத்துக்கள் தெரிவித்திருந்தனர்.
இப்படத்தின் சர்ச்சை பெரும் பேசுபொருளாகி அடங்கியிருக்கும் இந்த நேரத்தில் மீண்டும் இதுகுறித்து கங்கனா பேசியிருப்பது சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.