சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் 11 உறுப்புக் கல்லூரிகளில் தமிழ் வழி பாடப்பிரிவுகள் தற்காலிகமாக நீக்கம் செய்யப்படும் என்ற உத்தரவு வாபஸ் பெறப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் தமிழ் வழி பாடப்பிரிவுகள் தற்காலிகமாக மூடப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் சில நாட்களுக்கு முன்பு உத்தரவிட்டது. இதன்படி ஆரணி, திண்டிவனம், விழுப்புரம், திண்டுக்கல், ராமநாதபுரம், அரியலூர், பண்ருட்டி உள்ளிட்ட 11 உறுப்பு கல்லூரிகளில் தமிழ் மொழியில் செயல்பட்டு வரும் மெக்கானிக்கல் மற்றும் சிவில் பாடப் பிரிவுகள் தற்காலிகமாக நீக்கப்பட்டது. மாணவர் சேர்க்கை இல்லாததன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த ஆணை திரும்பப் பெறப்படுவதாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனியார் தொலைக்காட்சியிடம் அவர் கூறுகையில், “11 உறுப்பு கல்லூரிகளில் சிவில், மெக்கானிக்கல் பாடங்கள் நிறுத்தப்படும் என்ற ஆணை திரும்பப் பெறப்படுகிறது. தமிழ் வழியில் என்று இல்லாமல் பொதுவாகவே சிவில், மெக்கானிக்கல் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை குறைவாகத்தான் உள்ளது. விரைவில் அனைத்து பொறியியல் பாடப்பிரிவுகளும் தமிழ் மொழியில் கொண்டு வரப்படும்” என்று தெரிவித்தார்.