அமித்ஷாவை கேள்வி கேட்டு டென்சனாக்கிய நிருபரை சம்பந்தபட்ட செய்தி நிறுவனம் பணி நீக்கம் செய்துள்ளது.
புதிய நாடாளுமன்றம் Central Vista வருகிற 28ம் தேதி பிரதமர் மோடியால் திறக்கப்பட உள்ளது. இந்தநிகழ்ச்சிக்கு அனைத்து எதிர்கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் அரசியலமைப்பு சட்டத்தின்படி நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் தலைவரும் குடியரசுத் தலைவர் ஆவார். அவ்வாறு இருக்கும் போது நாட்டின் முதல் குடிமகனும், நாடாளுமன்றத்தின் அதிகாரம் மிக்கவருமான குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு புதிய நாடாளுமன்ற திறப்பு நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
பழங்குடியினத்தவர் என்ற ஒற்றை காரணத்தால் குடியரசு தலைவருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என கூறி
, காங்கிரஸ், விசிக உள்ளிட்ட 19 எதிர்கட்சிகள் திறப்பு விழாவை புறக்கணிப்பதாக அறிவித்தன. மேலும் இந்த புதிய நாடாளுமன்றத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் அப்போதைய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால் அழைப்பு விடுக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடதக்கது. இந்த விவகாரம் அனைத்து மட்டங்களிலும் பேசு பொருளாகியுள்ளது.
இந்தநிலையில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா இது குறித்து செய்தியாளர் சந்திப்பை நடத்தினார். அப்போது பேசிய அவர், ஆட்சி மாற்றத்தை குறிக்கும் வகையில் தென் மாநில குறிப்பாக தமிழ்நாட்டின் சோழர்கள் செங்கோலை ஏந்தி அரசாண்டனர். அந்த வகையில் புதிய நாடாளுமன்றத்தில் சபாநாயகர் இருக்கைக்கு அருகே செங்கோல் வைக்கப்பட உள்ளது. இந்தியா சுதந்திரம் அடைந்து ஆங்கிலேயரிடம் ஆட்சி மாற்றம் நிகழ்ந்த போது, அப்போதைய ஆளுநர் மவுண்ட் பேட்டன் இந்த செங்கோலை நேருவிற்கு வழங்கினார். இப்போது அந்த செங்கோல் அருங்காட்சியகத்தில் உள்ளது. அதை நாடாளுமன்றத்திற்கு கொண்டு வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என அமித்ஷா விளக்கினார்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்கள் அவரிடம் கேள்விகளை எழுப்பினர். அதில் பிரபல தமிழ் செய்தி நிறுவனத்தின் டெல்லி நிருபர் வெங்கட்ராமன் என்பவர் எழுப்பிய கேள்வி அமித்ஷாவை டென்சனாக்கியது. ‘‘புதிய நாடாளுமன்றத்தில் வைக்கப்பட உள்ள செங்கோல் குறித்து தமிழ்நாடு மக்களுக்கு பரிச்சயம் உள்ளது. இந்த செங்கோல் பயன்பாடு என்பது தமிழ்நாட்டை ஆண்ட சேர, சோழ மற்றும் பாண்டிய மன்னர்களும் பின்பற்றி வந்தனர். இது குறித்து தென்னிந்திய மக்களுக்கு நன்றாகத் தெரியும்.
ஆனால் தற்போது தென்னிந்திய மக்கள் அனைவருமே பாஜகவை வெளியேற்றி விட்டனரே” என நிருபர் கேள்வியை கேட்டுக் கொண்டிருந்தபோதே, ஷட் அப் சொன்ன அமித்ஷா அடுத்தவர் கேள்வி கேளுங்கள் என்று கூறினார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. தொடர்ந்து பாஜகவிற்கு ஆதரவாக எழுதி வருவதாக திராவிட இயக்கத்தவர்கள் குறிப்பிடும் அந்த பிரபல செய்தி நிறுவனத்தின் நிருபரா இத்தகைய கேள்வியை கேட்டார் என இந்த விவகாரம் பேசு பொருளானது. இந்தநிலையில் கேள்வி கேட்ட நிருபர் வெங்கட்ராமனை பணியில் நீக்கியுள்ளது அந்த பிரபல தமிழ் நாளிதழ் நிர்வாகம்.