கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை அடிவாரத்தில் உள்ள ஒரு கிராமத்தில், ஒரு வருடமாக தண்ணீர் கொடுக்கவில்லை எனக் கூறி திமுக எம்.எல்.ஏ. உதயசூரியனிடம் மக்கள் வாக்குவாதம் செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஈடில்லா ஆட்சி இரண்டு ஆண்டே சாட்சி என்ற முழக்கத்துடன் திமுக அரசின் 2 ஆண்டு கால சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்கள் தமிழ்நாடு முழுவதும் நடத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் கல்வராயன்மலை அடிவாரத்தில் கலந்துகொள்வதற்காக சென்ற உதயசூரியன் எம்.எல்.ஏ.வை சுற்றிவளைத்த கிராம மக்கள் தண்ணீர் கொடுக்காததற்கான காரணத்தை கேட்டு கேள்விக்கணைகளை வீசினர்.
இதென்னடா வம்பா போச்சு என்கிற வகையில் கிராம மக்களின் ஆதங்கத்தையும், கோபத்தையும் தணிக்கும் வகையில் அங்கிருந்தவாறே அதிகாரிகளை தொடர்பு கொண்டு சில உத்தரவுகளை போட்டார் உதயசூரியன் எம்.எல்.ஏ.
காவல்துறையினர், உள்ளூர் கட்சியினர் வாக்குவாதம் செய்தவர்களை சமாதானம் செய்த பிறகே எம்.எல்.ஏ. உதயசூரியனை கார் ஏற விட்டனர்.
சாதனைகளை விளக்கிப் பேசச் சென்ற இடத்தில் இப்படியொரு சோதனை தனக்கு வரும் என்பதை எதிர்பார்த்திருக்கமாட்டார் உதயசூரியன் எம்.எல்.ஏ.
தற்போது கோடைக்காலம் என்பதால் தண்ணீர் பஞ்சம் இன்னும் அதிகரித்ததே அந்த கிராம மக்களின் கோபத்துக்கு காரணமாக கூறப்படுகிறது.
இதனிடையே இந்த விவகாரத்தை கவனிக்க வேண்டிய திமுக உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு உதயசூரியன் எம்.எல்.ஏ. டோஸ் விட்டிருப்பார் எனத் தெரிகிறது.