பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவை தலைவராக யு.டி.காதர் தேர்வு செய்யப்படுள்ளார். கர்நாடகாவில் கடந்த 20-ம் தேதி முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் அரசு பொறுப்பேற்றது. இதையடுத்து தற்காலிக பேரவைத் தலைவராக ஆர்.வி.தேஷ்பாண்டே நியமிக்கப்பட்டார். அவரது முன்னிலையில் புதிய உறுப்பினர்கள் பதவியேற்றனர். அதில் பெரும்பாலானோர் கடவுளின் பெயராலும் அரசியலமைப்பு சட்டத்தின் பெயராலும் பதவியேற்றனர்.
இந்நிலையில் பேரவைத் தலைவர் பதவிக்கு மங்களூரு எம்எல்ஏ யு.டி.காதர் (54) நேற்று முன்தினம் வேட்பு மனு தாக்கல் செய்தார். பாஜக, மஜத தரப்பில் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. இதையடுத்து யு.டி.காதர் பேரவைத் தலைவ ராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக பேரவை செயலாளர் நேற்று அறிவித்தார்.
கர்நாடக சட்டப்பேரவை வரலாற்றில் முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த ஒருவர் பேரவைத் தலைவராக பொறுப்பேற்பது இதுவே முதல் முறையாகும். மங்களூருவில் 5 முறை எம்எல்ஏவாக வெற்றிபெற்றுள்ள யு.டி.காதர், கடந்த சித்தராமையா, குமாரசாமி அரசுகளில் அமைச்சராக பதவி வகித்தார்.
எதிர்க்கட்சி துணைத் தலைவராக இருந்த அவர் ஹிஜாப், ஹலால் உள்ளிட்ட விவகாரங்களில் தீவிரமாக செயல்பட்டார்.பேரவைத் தலைவராக தேர் வான யு.டி.காதரை முதல்வர் சித்தராமையா, முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை, தற்காலிக பேரவைத் தலைவர் ஆர்.வி.தேஷ்பாண்டே ஆகியோர் இருக்கையில் அமர வைத்தனர்.