பீஜிங்: சீனாவில் ஒமிக்ரான் வகையின் புதிய திரிபு வைரசான எக்ஸ்.பி.பி கொரோனா பரவி வருவதாகவும், தற்போது ஏற்பட்டு இருக்கும் இந்த கொரோனா அலை ஜூன் மாத இறுதியில் உச்சம் தொடும் எனவும் அப்போது ஒரு வாரத்தில் 6.5 கோடி பேருக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் உகான் நகரில் கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் என்னும் பெருந்தொற்று கண்டறியப்பட்டது. சீனாவில் பரவிய இந்த வைரஸ் அடுத்தடுத்த வாரங்களில் உலகநாடுகளில் எல்லாம் வியாபித்தது. காட்டுத்தீ போல பரவிய இந்த வைரஸ் பெருந்தொற்றை கடுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் விழி பிதுங்கின.
பொது முடக்கம் ஆகியவற்றை அமல்படுத்தி தொற்று பரவலின் வேகத்தை ஓரளவு உலக நாடுகள் கட்டுப்படுத்தினாலும் முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை. வைரஸ் பரவலால் பொருளாதார அளவிலும் கடும் பாதிப்பு ஏற்பட்டது. அதன்பிறகு தடுப்பூசிகள் வந்த பிறகே தொற்று பரவலின் தீவிரம் குறைந்தது. தற்போது வைரஸ் பெருந்தொற்று உலக அளவில் பெரும்பாலும் கட்டுக்குள் வந்து விட்டது.
மக்களும் இயல்பு வாழ்க்கை திரும்பி விட்டனர். உலக சுகாதார அமைப்பும் கொரோனா அவசர நிலை அறிவிப்பை திரும்ப பெற்றுக்கொண்டது. எனினும், கொரோனா அச்சுறுத்தல் முழுமையாக நீங்கவில்லை என்றும் உலக சுகாதர அமைப்பு எச்சரித்து இருந்தது. இந்த நிலையில், சீனாவில் மீண்டும் வைரஸ் பரவல் மெல்ல தலை தூக்க ஆரம்பித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஒமிக்ரான் வகை கொரோனாவின் திரிபான எக்ஸ்.பி.பி வைரஸ் பரவலால் சீனாவில் ஏப்ரல் மாதத்தில் இருந்தே தொற்று பாதிப்பு சற்று உயரத் தொடங்கியிருப்பதாக புளூம்பெர்க் செய்தி வெளியிட்டுள்ளது. நடப்பு மாத இறுதியில் ஒரு வாரத்தில் 4 கோடி பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இதேபோல் ஜூன் மாத இறுதியில் இந்த கொரோனா அலை உச்சம் தொடும் எனவும் அப்போது ஒரு வாரத்தில் 6.5 கோடி பேருக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் கொரோனா பரவத் தொடங்கிய பிறகு ஏற்படும் மிகப்பெரும் அலையாக இது இருக்கும் எனவும் கூறப்படுகிறது.