கள்ளச்சாராயம் மற்றும் போலி மதுபான விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளதால் டாஸ்மாக் கடை செயல்படும் நேரத்தை குறைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
தமிழகம் முழுவதும் அரசு சார்பில் 5329 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. கடந்த சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் பொழுது தமிழக முழுவதும் 500 டாஸ்மாக் கடைகளை முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3ம் தேதி மூட அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கிடையே விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்த நிலையில் தஞ்சையில் அரசு அனுமதி பெற்ற டாஸ்மாக் பாரில் கள்ளச் சந்தையில் விற்கப்பட்ட மதுபானம் குடித்து 2 பேர் உயிரிழந்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியது.
இதனைத் தொடர்ந்து சென்னை தலைமைச் செயலகத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் மாவட்ட கலால் துறை அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் டாஸ்மாக் செயல்படும் நேரம் குறித்து அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும், தமிழகத்தில் எத்தனால் பயன்பாடு குறித்து அதிகாரிகள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
இதற்கிடையே தமிழக முழுவதும் 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதோடு டாஸ்மாக் கடைகள் செயல்படும் நேரத்தை குறைக்கவும் தமிழக அரசு பரிசளித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி பிற்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும் டாஸ்மாக் கடைகளில் நேரத்தை பிற்பகல் 1 மணி முதல் இரவு 9 மணி வரை குறைக்கலாம் என்ற ஆலோசனை நடைபெற்ற வருகிறது. இதற்கு முன் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சி காலத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு 500 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டதோடு செயல்படும் நேரத்தை பிற்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை குறைத்து உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.