தமிழகத்தில் முதல் முறையாக காவல் துறையில் முழு பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன: டிஜிபி சைலேந்திர பாபு

உதகை: தமிழகத்தில் முதல் முறையாக காவல் துறையில் முழு பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன என காவல் துறை தலைவர் சி.சைலேந்திர பாபு கூறியுள்ளார்.

நீலகிரி மாவட்டத்துக்கு வந்த காவல் துறை தலைவர் சி.சைலேந்திர பாபு இன்று குன்னூர், வெலிங்டன், உதகை காவல் நிலையங்களை ஆய்வு செய்தார். அப்போது, காவல் நிலையங்களில் பராமரிக்கப்படும் பதிவேடுகள், ஆவணங்களை ஆய்வு செய்தார். மேலும், காவல் நிலையங்களில் பணியாற்றும் போலீஸாரிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “உதகையில் உள்ள பழங்குடியினர் ஆய்வு மையம் சார்பில் காவல் துறை சமூக நிதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு காவலர்களுக்கு, பழங்குடியினர் சான்று மற்றும் அவர்களுக்கு எதிரான குற்றங்களை கையாளுவது குறித்து இரு நாள் பயிற்சி அளிக்கப்படுகிறது.

தமிழகத்தில் 1.2% பழங்குடியினர் உள்ளனர். கடந்த ஆண்டு இவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக 75 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2,600 பழங்குடியினரின் சாதி சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன. நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் பணிக்காக 900 காவலர் பணியமர்த்தப்பட்டனர். அவர்கள் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் போக்குவரத்தை கட்டுபடுத்தினர். மேலும், ஹில்காப் என்ற பெயரில் உதகையில் 5, குன்னூரில் 5, ரோந்து வாகனங்களில் போக்குவரத்து போலீஸார் போக்குவரத்தை சீரமைத்தனர்.

சுற்றுலா போலீஸார் உதகை மட்டுமின்றி மாமல்லப்புரம் மற்றும் பிற சுற்றுலா தலங்களிலும் சிறப்பாக பணியாற்றினர். வரலாற்று முக்கியதுவம் வாய்ந்த உதகையில் உள்ள பழைய பி1 காவல் நிலையம் அருங்காட்சியமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். காவல் துறையினர் மற்றும் பொதுமக்களுடன் நல்லுறவு பேணும் வகையில் காவல் நிலையங்களில் வரவேற்பு அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

காவல் நிலையங்களில் 2300 வரவேற்பு அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கு காவல் நிலையத்துக்கு வரும் பொதுமக்களிடம் கனிவாகப் பேசி, புகார்களை பதிவு செய்வது குறித்து 3 மாத பயிற்சி அளிக்கப்பட்டது. காவல் துறையில் முழு பணியிடங்கள் நிரப்பப்பட்டால்தான் சிறப்பாக பணியாற்ற முடியும். தற்போது தமிழ்நாடு காவல் துறையில் பணியிடங்கள் முழுமையாக நிரப்பட்டு, முழு திறன் கொண்டுள்ளது.

தமிழகத்தில் கடந்தாண்டு 10 ஆயிரம் காவலர்கள் நியமனம் செய்யப்பட்டன. மேலும், 3500 காவலர்கள் தேர்வாகி பயிற்சியில் சேர்ந்துள்ளனர். மேலும், 2500 பேர் நியமிக்கப்படவுள்ளனர். உதவி ஆய்வாளர்கள் 1000 பேர் பயிற்சி பெற்று பணியில் சேர்ந்துள்ளனர். மேலும், 444 உதவி ஆய்வாளர்கள் பயிற்சி பெற்றுள்ளனர். 600 உதவி ஆய்வாளர்கள் காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடக்கவுள்ளது.

இனி 6 மாதங்கள் பிறகுதான் மீண்டும் ஆட்கள் தேர்வு நடக்கும். தமிழகத்தில் முதல் முறையாக காவல் துறையில் முழு பணியிடங்கள் நிரைப்பட்டுள்ளன” என்று சைலேந்திர பாபு கூறினார். ஆய்வின்போது, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கி.பிரபாகர், கூடுதல் எஸ்.பி. மணி, உதகை நகர டிஎஸ்பி பி.யசோதா மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.