1,200 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட புதிய நாடாளுமன்றத்தில் சோழர் கால செங்கோலை பிரதமர் நரேந்திர மோடி நிறுவ இருப்பதாகத் தகவல்கள் பரவுகின்றன.
சோழர்களின் அரண்மனை, மாளிகைகள் என்று எதுவுமே மிஞ்சியிருக்காத நிலையில், சோழர்கள் பயன்படுத்திய செங்கோல் மட்டும் எப்படிக் கிடைத்திருக்க முடியும்? இதற்கும் சோழர்களுக்கும் என்ன தொடர்பு?
இந்திய சுதந்திரத்தின் அடையாளமாகவும், பிரிட்டிஷார் கையிலிருந்து இந்தியர்களுக்கு ஆட்சி அதிகாரம் மாறிவிட்டது என்பதற்கான அத்தாட்சியாகவும் இருக்கும் செங்கோல் அது. அந்த சரித்திர நிகழ்வில், தமிழகத்தின் பெருமையான இதை வழங்கியது, திருவாவடுதுறை ஆதீன மடம். உருவாக்கியவர்கள், பாரம்பரியமான நகை நிறுவனமான வி.பி.ஜே ஜுவல்லர்ஸ். இந்த எல்லா விஷயங்களும் பிரதமர் கவனத்துக்குச் செல்வதற்குக் காரணமாக இருந்தது விகடனில் வெளியான கட்டுரை. அந்த வரலாற்றைப் பார்க்கலாம், வாருங்கள்!
இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரலாக இருந்தவர் மவுன்ட் பேட்டன். இந்திய சுதந்திரத்துக்கான நடைமுறைகள் தீர்மானிக்கப்பட்டு, அவரிடமிருந்து ஆட்சி இந்தியர்கள் கைக்கு மாற வேண்டிய நேரம். பிரிட்டிஷாரின் யூனியன் ஜாக் கொடி இறக்கப்பட்டு, சுதந்திர இந்தியாவின் தேசியக்கொடி ஏற்றப்படுவதே ஆட்சி மாற்றத்தை முறையாக அடையாளப்படுத்தும்.
மூதறிஞர் ராஜாஜி ”தமிழகத்தில் மன்னராட்சிக் காலத்தில் ஆட்சி மாற்றம் நடக்கும்போது, புதிய மன்னரின் கரங்களில் ராஜகுரு ஒரு செங்கோலைக் கொடுத்து ஆசீர்வதிப்பார். நீதிநெறி வழுவாமல் ஆட்சி நடைபெற வேண்டும் என்பதற்கான அடையாளமாக அந்த செங்கோல் இருக்கும். அதுபோல நீங்களும் செங்கோல் பெற்றுக்கொள்ளுங்கள்” என்று அப்போது நேருவுக்கு சொன்னதாக ஒரு தகவல். நேரு சம்மதிக்க, உடனே அதற்கான ஏற்பாடுகள் நடந்தன.
இந்தியாவின் பாரம்பரியமான சைவ மடங்களில் ஒன்றான திருவாவடுதுறை ஆதீன மடத்தின் குருமகா சந்நிதானமாக அப்போது இருந்தவர் அம்பலவாண தேசிகர். அவரைத் தொடர்புகொண்ட ராஜாஜி, செங்கோல் செய்துதரச் சொல்லிக் கேட்டிருக்கிறார். ஆதீனம் உடனே சென்னையில் பிரபலமாக இருக்கும் உம்மிடி பங்காரு செட்டியார் நகைக் கடையில் சைவச் சின்னம் பொறித்த தங்கத்திலான செங்கோல் ஒன்றைத் தயாரித்துத் தரும்படிக் கேட்டுக்கொண்டார்.
உம்மிடி பங்காரு செட்டியாரும் மகிழ்ச்சியுடன் அதைச் செய்துகொடுத்தார். 100 சவரன் தங்கத்தில் ஐந்து அடி நீளத்தில் அழகிய தோற்றத்துடன் தயாரானது அந்த தங்க செங்கோல். அதன் உச்சியில் ரிஷபச் சிலை கம்பீரமாக இருந்தது. கைப்பிடியில் தேசத்தின் செழிப்புக்கு அடையாளமாக லட்சுமி தேவி உருவம் பொறிக்கப்பட்டது. சுதந்திர இந்தியாவின் தேசியக் கொடியும், இந்த செங்கோலை ஆதீனம் உருவாக்கிக் கொடுத்தது என்பதற்கான தமிழ் வாசகங்களும் அதில் இடம் பிடித்தன. நான்கே வாரங்களுக்கும் இதை நேர்த்தியுடன் செய்துகொடுத்தார் உம்மிடி பங்காரு செட்டியார். அந்தக் காலத்தில் இதற்கு 15 ஆயிரம் ரூபாய் செலவானது.
தனி விமானத்தில் இந்த செங்கோலுடன், திருவாவடுதுறை ஆதீன மடத்தின் கட்டளை சாமியாக இருந்த திருவதிகை குமாரசாமி தம்பிரான் உட்பட பலர் சென்றனர். மங்கள இசை முழங்க திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை குழுவினரும் சென்றிருந்தனர்.
1947-ம் ஆண்டு, ஆகஸ்ட் 14-ம் தேதி நள்ளிரவில் நேருவின் இல்லத்துக்கு இதை மங்கள இசையுடன் ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். திருவாவடுதுறை ஆதீன மடத்தின் கட்டளை சாமி தேவாரம் பாடி, செங்கோல் மீது புனிதநீர் தெளித்து, இறை நாமம் உச்சரித்து, நேருவுக்குப் பொன்னாடை போர்த்தி அவரிடம் இதைக் கொடுத்தார்.
இது தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்த்த விஷயம். நேருவின் கரங்களில் செங்கோலை ஆதீன மடத்தின் கட்டளை சாமி தரும் அரிய புகைப்படம் திருவாவடுதுறை ஆதீன மடத்தில் இப்போதும் இருக்கிறது. பிரதமராகப் பதவியேற்ற பிறகு நேருவுக்கு வழங்கப்பட்ட பரிசுகள் எல்லாமே அரசு ஆவணக் காப்பகத்தில் வைக்கப்படும். இது அதற்கு முன்பாக அவர் கையில் கொடுக்கப்பட்டது என்பதால், நேரு வீட்டிலேயே தங்கிவிட்டது.
`சோழர் செங்கோல்’ என்று சொல்லப்பட்டாலும், இதற்கும் சோழர் காலத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. சோழர்கள் செங்கோலை வாங்கி ஆட்சி மாற்றத்தை அடையாளப்படுத்தியது போல, நேருவும் செய்ய வேண்டும் என்ற ஆசையில் புதிதாக உருவாக்கியதே அது. இந்த செங்கோலை நேருவின் கரங்களில் ஒப்படைக்கும் நிகழ்ச்சி, நாடாளுமன்றத்தில் அரசு நிகழ்ச்சியாக நடைபெறவில்லை. நேருவின் இல்லத்தில் நடைபெற்ற தனிப்பட்ட சடங்காகவே அது இருந்தது.
நாளடைவில் இந்த செங்கோலை எல்லோரும் மறந்துவிட்டார்கள். நேருவின் மறைவுக்குப் பிறகு உத்தரப்பிரதேசத்தின் அலகாபாத் நகரில் உள்ள நேருவின் இல்லமான ஆனந்த பவன், ஒரு அருங்காட்சியகமாக மாற்றப்பட்டது. நேருவின் டெல்லி வீட்டிலிருந்த எல்லா கலைப்பொருட்களும் அங்கு மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டன.
அப்படி ஆதீனம் வழங்கிய செங்கோலும் அங்கு போய்விட்டது. ஆனால் அதன் வரலாறு தெரியாதவர்கள், ‘நேரு பயன்படுத்திய தங்க வாக்கிங் ஸ்டிக்’ என்று அதை அடையாளப்படுத்தி விட்டனர். ஒரு கண்ணாடிப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த அதை நேருவின் வாக்கிங் ஸ்டிக் என்றே பார்வையாளர்களிடம் அருங்காட்சியக ஊழியர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
இந்நிலையில் 2019-ம் ஆண்டு ஜூனியர் விகடனில் இந்த செங்கோல் பற்றியும், இதனுடன் தமிழகத்துக்கும் திருவாவடுதுறை ஆதீனத்துக்கும் உம்மிடி பங்காரு ஜுவல்லர்ஸுக்கும் இருக்கும் தொடர்பு பற்றியும் கட்டுரை வெளியானது. உம்மிடி பங்காரு செட்டியாரின் மகன் உம்மிடி எத்திராஜு இந்த செங்கோலைச் செய்யும்போது இளம்வயதில் இருந்தார். அவருக்கு அப்போது நடந்த பரபரப்புகள் நினைவுக்கு வந்தன.
ஜூனியர் விகடன் கட்டுரையைப் படித்துவிட்டு அவர் இதை வி.பி.ஜே நிறுவனத்தின் மேனேஜிங் பார்ட்னர் அமரேந்திரன் உம்மிடியிடம் சொல்ல, நாடு முழுக்க இருக்கும் அருங்காட்சியகங்களில் அவர்கள் செங்கோலைத் தேடி இதை அலகாபாத்தில் கண்டுபிடித்தனர். இந்த செங்கோலை உருவாக்கியது குறித்து அதன்பின் வி.பி.ஜே நிறுவனம் வீடியோ ஒன்றை உருவாக்கி வெளியிட்டது. இதை பிரதமர் மோடி பார்த்திருக்கிறார். புதிய நாடாளுமன்றத்தில் சபாநாயகரின் இருக்கைக்கு அருகில் இதை நிறுவ வேண்டும் என்று அவர் தீர்மானித்தார்.
சுதந்திரத்தின்போது நேருவின் இல்லத்தில் நடைபெற்றது போல, புதிய நாடாளுமன்றத் திறப்புவிழாவின்போது பிரதமர் மோடியின் இல்லத்திலும் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இதற்காக தமிழகத்திலிருந்து 20 ஆதீனங்கள் டெல்லி செல்கிறார்கள்.
அவர்கள் அதேபோன்ற ஆன்மிக நிகழ்வை நடத்தி செங்கோலை பிரதமர் கரங்களில் கொடுக்க உள்ளார்கள். இதற்காக வி.பி.ஜே நிறுவனம் 75 ஆண்டுகளுக்கு முன்பு செய்தது போலவே இரண்டு புதிய செங்கோல்களை அதே பாரம்பரியம் மாறாத கலையம்சத்துடன் செய்து கொடுத்திருக்கிறது. ஒன்று தங்கத்திலும், இன்னொன்று வெள்ளியிலும் செய்யப்பட்டுள்ளது.
வி.பி.ஜே நிறுவனத்தினரும் புதிய நாடாளுமன்றத் திறப்பு விழாவுக்கு சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ளனர்.