நீதி அமைச்சின் ஏற்பாட்டில் மாபெரும் நடமாடும் சேவை!!

நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு அமைச்சினால், மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 2023.05.27 திகதி காலை 9.00 மணி தொடக்கம் மாலை 4.00 மணி வரை மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலையில் இம்மாபெரும் நடமாடும் சேவை நடைபெறவுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த அகதிகளின் பிரச்சினைகள் போன்றவற்றிற்கு ஒரே நாளில், ஒரே இடத்தில் தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கான மாபெரும் நடமாடும் சேவை மட்டக்களப்பில் இடம்பெறவுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய மட்டக்களப்பு மாவட்ட அகதிகள் ஆகியோர் இந் நடமாடும் சேவையில் கலந்துகொண்டு தங்களுக்கான பிரச்சினைகளுக்கான தீர்வைப் பெற்றுக்கொள்ளலாமென மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்நடமாடும் சேவையில் நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சு, பாதுகாப்பு, வெளிநாட்டு அலுவல்கள், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு ஆகிய அமைச்சுக்கள், ஆட்களை பதிவு செய்யும், குடிவரவு மற்றும் குடியகல்வு, தலைமைப் பதிவாளர் ஆகிய திணைக்களங்கள், மாகாண காணி ஆணையாளர், காணாமல்போன ஆட்கள் போன்ற அலுவலகங்கள் மற்றும் இழப்பீடுகளுக்கான அலுவலகம், தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்கான அலுவலகம், மத்தியஸ்த சபை ஆணைக்குழு மற்றும் சட்ட உதவி ஆணைக்குழு என்பன கலந்து கொள்ளவுள்ளன.

குறித்த நடமாடும் சேவையின் ஊடாக குடியுரிமை பிரச்சினைகளுக்கு தீர்வு காணுதல்,பிறப்பு, விவாகம், இறப்புச் சான்றிதழ்கள் பதிவு செய்தல் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் அவ் ஆவணங்களை பெற்றுக் கொள்ளல் தொடர்பான பிரச்சினைகளுக்கும் தீர்வு காணுதல், தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக் கொள்ளல், திருத்துதல் மற்றும் காணாமல்போன அடையாள அட்டைகளுக்கான இரண்டாவது பிரதி ஒன்றினை வழங்குவது தொடர்பான சேவைகளை வழங்குதல், காணி தொடர்பான பிரச்சினைகள் மற்றும் மீள்குடியேற்றம் தொடர்பான பிரச்சினைகளுக்கான தீர்வு காணுதல், இழப்பீடுகளுக்கான நட்ட ஈட்டினை பெற்றுக் கொள்ளல் தொடர்பாக விண்ணப்பித்தவர்களின் கோவைகளில் காணப்படும் குறைபாடுகளை பூர்த்தி செய்தல், காணாமல் போனோர் தொடர்பான விசாரணைகளை நடாத்துதல் மற்றும் அவ் விசாரணைகளுக்கு தேவையான ஆவணங்களை பூர்த்தி செய்தல், மத்தியஸ்தம் தொடர்பான விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சித் திட்டத்தினை நடைமுறைப்படுத்தல், காணி தொடர்பாக விசேட மத்தியஸ்த சபை குறித்த விழிப்புணர்வு, சட்ட ஆலோசனை மற்றும் ஆலோசனை முகாமினை நடாத்துதல் போன்ற சேவைகளை பெற்றுக் கொள்ளலாம்.

இச்சேவைக்கு ஐக்கிய அமெரிக்காவின் உதவிகள் நிறுவனம் (USAID) அனுசரணை வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் நீதி அமைச்சு திருகோணமலை மாவட்ட மக்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நடமாடும் சேவை நாளை (மே 26) திருகோணமலை மாவட்ட செயலக வளாகத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.