கெர்ட் ஜான் ஒஸ்காம் என்ற நபர், 2011-ம் ஆண்டு சீனாவில் வசித்து வந்தபோது மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கியதில் தன் இடுப்புப் பகுதியில் இருந்து, அதற்கு கீழே முற்றிலுமாக செயலிழந்தார். இப்போது சாதனங்களின் உதவியுடன் விஞ்ஞானிகள் மீண்டும் அவரது உடலுக்கு கட்டுப்பாட்டைக் கொடுத்துள்ளனர்.
இது தொடர்பாக நேச்சர் இதழில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வு முடிவில், `சுவிட்சர்லாந்தில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் ஒஸ்காமின் மூளைக்கும், அவரது முதுகுத் தண்டுக்கும் இடையே டிஜிட்டல் பாலத்தை உருவாக்கி அதைக் குறிப்பிட்ட ஒரு சாதனத்துடன் இணைத்து அவரை நடக்கச்செய்து அசத்தியுள்ளனர்.
இதனால் முற்றிலுமாக கால்களின் செயல்பாட்டை இழந்த ஒஸ்காமால் தற்போது தானாக எழுந்து நிற்க முடிகிறது, தனியாக நடக்க முடிகிறது… ஏன் செங்குத்தான சரிவில் அவரால் ஏறவும் முடிகிறது.
“ஒஸ்காமின் எண்ணங்களை நாங்கள் கைப்பற்றியுள்ளோம். இந்த எண்ணங்களின் மூலம் தன்னார்வ இயக்கத்துடன் முதுகுத்தண்டை தூண்டியுள்ளோம். மூளை மற்றும் முதுகெலும்புக்கு இடையேயான ஒஸ்காமின் எண்ணங்களை அறிய செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தியுள்ளோம். இவற்றை தசை இயக்கங்களுடன் பொருத்தி அவரை இயற்கையாக நடக்க வைத்துள்ளோம்” என ஸ்விஸ் ஃபெடரல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின் முதுகுத் தண்டு நிபுணரான லோசேன் க்ரெகோயர் கோர்டைன் கூறினார்
இந்த முடிவை அடைய ஆராய்ச்சியாளர்கள், முதலில் ஒஸ்காமின் மண்டை ஓடு மற்றும் முதுகெலும்பில் மின்முனைகளைப் பொருத்தி அவர் தன் உடலில் வெவ்வேறு பகுதிகளை நகர்த்த முயற்சி செய்தபோது மூளையின் எந்தப் பகுதிகள் ஒளிர்கின்றன என்பதைக் கண்காணித்துள்ளனர்.
இதேபோன்று, அவர் தன் இடுப்பை நகர்த்த முயலும்போதும் கால்களை நகர்த்த முயலும்போதும் அதற்கு ஏற்றவாறு மின்முனைகளைப் பொருத்தியுள்ளனர். பின்னர் ஆராய்ச்சியாளர்கள் மூளை உள்வைப்பை முதுகெலும்பு உள்வைப்புடன் இணைக்க மற்றொரு வழிமுறையைப் பயன்படுத்தியுள்ளனர்.
இது ஒஸ்காமின் உடலின் பல்வேறு பகுதிகளுக்கு மின் சமிக்ஞைகளை அனுப்பி அதன் மூலம் உறுப்புகளின் இயக்கத்தைத் தூண்டியுள்ளது. மூளைக்கும் முதுகுத்தண்டுக்கும் சிக்னல்கள் அனுப்பப்பட்டதால் ஒஸ்காமால் நடக்க முடிந்துள்ளது.
இது பற்றி பேசியுள்ள ஒஸ்காம், “12 ஆண்டுகளாக நான் இழந்த கால்களைத் திரும்பப்பெற முயற்சி செய்கிறேன். இப்போது நான் சாதரணமாக இயற்கையாக எப்படி நடக்க வேண்டும் என்று கற்றுக் கொண்டேன். இது ஆரம்பத்தில் எனக்கு அறிவியல் புனைக்கதை போல இருந்தது ஆனால் இன்று என் மூலமாகவே உண்மையாகிவிட்டது” என்று மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.